காயத்திலிருந்து மீண்டு புலியென திரும்பினார் கோஹ்லி.. மும்பை பவுலர்களுக்கு நாளை காத்திருக்கிறது கிலி
பெங்களூர்: தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட விராட் கோஹ்லி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நாளை களமிறங்க உள்ளார். இது மொத்த ஐபிஎல் தொடருக்குமே புத்துணர்ச்சி பாய்ச்சுவதாக உள்ளது என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.
பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ள மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் கோஹ்லி களமிறங்க உள்ளார். சக அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், டிவிட்டரில் இத்தகவலை பகிர்ந்து கொண்டதோடு, உற்சாகமும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்டில் கோஹ்லிக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டது. ஏப்ரல் 2வது வாரத்தில்தான் மீண்டும் உடல் பரிசோதனை நடைபெறும் என பிசிசிஐ மருத்துவ குழு அறிவித்திருந்தது.

தீவிர பயிற்சி
இந்நிலையில் கோஹ்லி உடல்நலம் தேறியுள்ளார். நேற்று சக பெங்களூர் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து கோஹ்லி நாளைய போட்டியில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. பிசிசிஐ மருத்துவ குழுவும் இதை தெரிவித்துள்ளது.

பவுலர்கள்
பும்ரா, மலிங்கா, ஹர்பஜன்சிங், மெக்ளேனகன் ஆகிய முன்னணி பவுலர்கள் பெங்களூர் அணிக்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், டிவில்லியர்ஸ், கோஹ்லி இணை இந்த தடைகளை தகர்த்து எறியும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

டிவில்லியர்ஸ் வருகை
பெங்களூர் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் தொடர்ந்து பேட்டிங்கில் சோபிக்கவில்லை. எனவே கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக டிவில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து மீண்டுவந்த டிவில்லியர்ஸ் புயலாக மாறி எதிரணியை பிரித்து மேய்ந்தார்.

வெற்றிப்பாதையில் பெங்களூர்
டிவில்லியர்ஸ் வெளுத்துக் கட்டியும் வேறு எந்த பேட்ஸ்மேனும் உதவாததால் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. விராட் கோஹ்லி வருகை, டிவில்லியர்சுக்கு பக்கபலமாக இருக்கும். வாட்சன், கேப்டன் பொறுப்பு இன்றி சுதந்திரமாக ஆட முடியும். இப்படி பல வகைகளில் பெங்களூர் அணிக்கு நல்லது நடக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications