For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல்.2015: சபாஷ் சென்னை- பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

By Mathi

ராஞ்சி: ஐ.பி.எல். போட்டியின் 2வது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்தது.

chennai

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக 'புயல்' கெய்ல், கேப்டன் கோஹ்லி களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை இருவரும் வெளுத்து விளையாடி மிரட்டினர். ஆனால் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களோ உஷாராக பந்துவீசி மடக்கத் தொடங்கினர். இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வேகம் அப்படியே முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது சென்னை அணி.

4.1வது ஓவரில் கோஹ்லியும் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் பெங்களூரு நிலைகுலைந்தது.

கோஹ்லி 12 ரன்களிலும் டிவில்லியர்ஸ் ஒரே ஒரு ரன்னையும் எடுத்து அவுட் ஆனார். இதேபோல் மந்தீப் சிங் சிறிது நேரமே நின்ற நிலையில் அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரரான கிறிஸ் கெய்ல் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களைக் குவித்து அரை சதத்தை நோக்கி பயணித்தார். அவர் 43 பந்துகளில் 41 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து சற்று விறுவிறுப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார். பின்வரிசை வீரர்களும் நிலைத்து ரன்களைக் குவிக்கவில்லை. கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பெங்களூரு அணி பறிகொடுத்தது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்பு 139 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியை வென்று இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸுடன் மோதுவதற்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரன்கள் 140...

பொறுப்புடன் ஆடி வென்ற சென்னை

இதைத் தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் ஹஸ்ஸியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.

ஆனால் ஸ்மித் 3.1 ஓவரில் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் டூபிளெஸ்சிஸ் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.

22 பந்துகளில் 21 ரன்களை எடுத்த நிலையில் டூபிளெஸ்சிஸ் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது. ஹஸ்ஸியுடன் இணைய வந்த ரெய்னா அதே வேகத்தில் ரன் ஏதுவும் எடுக்காமல் 2வது பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் ஹஸ்ஸியுடன் கேப்டன் டோணி கை கோர்த்தார். இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் சென்னை அணி பொறுப்புணர்ந்து விளையாடியே வந்தது. ஹஸ்ஸி 43 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்களை எட்டியிருந்தது.

இருப்பினும் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸி அவுட் ஆனார். களத்தில் கேப்டன் டோணியும் நெகியும் நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

18.5வது பந்தில் நெகி 12 ரன்கள் எடுத்த நிலையிலும் 18.6வது பந்தில் பிராவோ டக் அவுட் ஆகவும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் டோணி இருக்க பயமேன் என்ற தெம்பில் சென்னை ரசிகர்கள் காத்திருந்தனர்.. பெங்களூரு அணியின் 139 ரன்களை எட்டியிருந்த நிலையில் கேப்டன் டோணி கடைசி ஓவரின் 4வது பந்தில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அஸ்வின் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் அடிக்க சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 23, 2015, 9:26 [IST]
Other articles published on May 23, 2015
English summary
The Chennai Super Kings beat Royal Challengers Bangalore by 3 wickets to reach their 6th IPL final.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+