
டெல்லி நல்ல பந்து வீச்சு
முதலில் பேட் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும், ட்வைன் ஸ்ம்த் ஓப்பனிங்கில் விளாசியதை வைத்து பார்த்தால் இந்த ஸ்கோர் குறைவுதான். மிடில் ஆர்டரில் டெல்லி டேர்டெவில்ஸ் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசியது சென்னையை கட்டுப்படுத்திவிட்டது.

கடைசி ஓவரில் கலக்கல்
ஆனால், 150 என்ற ஸ்கோரை எட்டச் செய்து உளவியல் ரீதியாக பெரிய ஸ்கோராக காட்டச் செய்ததில் சென்னை இன்னிங்சின் கடைசி ஓவர்தான் முக்கியமானது. ஏனெனில் அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தன. 19வது ஓவர் முடிவடையும்போது சென்னை 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள்தான் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 15 ரன்களுக்கும் குறைவாகத்தான் சென்னை பெற்றிருந்தாலும், அம்பேலாகியிருக்கும் கதை. ஏனெனில், உளவியல் ரீதியாக சென்னை பவுலர்களுக்கு 150 என்பதால் கிடைத்த தன்னம்பிக்கை 140 அல்லது 149 ரன் என்றால் கிடைத்திருக்காது.

அடுத்தடுத்து டோணி சிக்சர்கள்
இத்தனைக்கும் கடைசி ஓவரை டெல்லியின் சிக்கன பவுலர் நாதன் கல்ட்டர்தான் வீசினார். ஆயினும், டோணி விளாசிய இரு சிக்சர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. கடைசி ஓவரின் முதல் பந்தை டோணி சந்தித்தார். லாங்-ஆன் திசையில், ஒரு ரன் கிடைத்தது. அடுத்ததாக அஸ்வின் 2வது பந்தை சந்தித்தார், அந்த பந்தில் மிட்-விக்கெட் திசையில் ஒரு ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் இப்படி கட்டை போடுகிறார்களே என்று கடுப்பாகினர் ரசிகர்கள். அப்போதுதான், கிளம்பியது டோணி ஸ்பெஷல் சிக்சர்கள். ஆட்டத்தின் 3 மற்றும் 4வது பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசினார் டோணி.

ஒரு லூஸ் ஷாட், ஒரு கிளாஸ் ஷாட்
3வது பந்தில் அடித்த சிக்சர், டோணி எதிர்பார்த்த திசையில் செல்லவில்லை. எகிறி வந்த பந்தை லெக்சைடு பக்கம் மடக்கி அடிக்க டோணி முற்பட்ட நேரத்தில், பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஆப்சைடில் சிக்சராக மாறியது. ஆனால் அடுத்த பந்தில் டோணி அடித்தது கிளாஸ் ஷாட். யார்க்கர் லென்த்தில் வீசப்பட்ட பந்தை, லாங் ஆன் திசையில் சிக்சராக மாற்றினார் டோணி. அதுவும் ஒற்றைக் கையில். இந்த ஷாட்டையும், அடுத்தடுத்த சிக்சர்களையும் கண்ட சென்னை ரசிகர்கள் ஆனந்த கூத்தாடினர்.

டீசன்ட் ஸ்கோர்
ஆட்டத்தின் 5வது பந்தில் டோணி கேட்ச் கொடுத்து அவுட் ஆனாலும், கடைசி பந்தில் மோகித்ஷர்மா அடித்த 2 ரன்கள் உதவியால் சென்னை, 150 ரன்களை ஸ்கோர் செய்தது. சென்னை டீசன்டான ஸ்கோரை எட்ட, அந்த இரு சிக்சர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன. அதுவும் அடுத்தடுத்த பந்துகளில் கிடைத்த சிக்சர்கள் என்பது சிறப்பு.

கடைசி ஓவரில் பரபரப்பு
அடுத்ததாக பேட் செய்ய வந்த டெல்லி டேர்டெவில்ஸ் இன்னிங்சின்போதும், கடைசி ஓவரில் இரு பந்துகள்தான் சென்னை வெற்றியை உறுதி செய்தன. டெல்லி பேட்ஸ்மேன்கள் சென்னையின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன், அல்பி மோர்க்கல் மட்டும், நங்கூரம் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்துக்கு ஆட்டம் வந்தது.

ரெய்னா சூப்பர் கேட்ச்
கடைசி ஓவரை ட்வைன் பிராவோ வீசினார். முதல் பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரியாக மாறியது. சென்னை ரசிகர்கள் இதய துடிப்பும் அதிகரித்தது. 2வது பந்தில் சிங்கிள்தான் கிடைத்தது. அப்போது, வெற்றிக்கு தேவை 4 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே. ஒரு பக்கம், செட்டான பேட்ஸ்மேன் நிற்கும்போது, இந்த ஸ்கோரை டி20 போட்டிகளில் அடிப்பது எளிதானதுதான். ஆனால், ஆட்டத்தின் 3வது பந்தை இம்ரான் தாஹீர் தூக்கியடிக்க அதை பவுண்டரி எல்லையில் நின்ற ரெய்னா அழகான கேட்சாக மாற்றினார்.

டெல்லி கை ஓங்கியது
இந்த கேட்ச் பிடிக்கப்பட்ட நேரத்திற்குள், மறுமுனைக்கு, ஆல்பி மோர்க்கல் ஓடிவந்துவிடவே, 4வது பந்தை அவர் சந்தித்தார். அந்த பந்தை மிட்விக்கெட் திசையில் அருமையான சிக்சராக மாற்றினார் மோர்க்கல். சென்னை மைதானத்தில் ஒரு நிமிடம், குண்டூசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது. கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவை. ஆடுவதோ, அதிரடி வீரர். 2 பவுண்டரியோ, அல்லது ஒரு சிக்சரும், 2 ரன்களுமே போதுமானது, சென்னையை வீழ்த்த என்ற நிலை.

வாட்டே ஃபீல்டிங் ரெய்னா
கடைசி ஓவரின் 5வது பந்தை ஆப் சைடில் வீசினா், பிராவோ, அதை கட் செய்து பவுண்டரி நோக்கி விரட்டினார் மோர்க்கல். ஆனால், ரெய்னா மிக அருமையாக அந்த பந்தை தடுத்தார். ஏனெனில், சிறிது தூரம் ஓடிவந்து பந்தை பிடிக்க வேண்டிய நிலை ரெய்னாவுக்கு. அவ்வாறு பிடிக்க முற்படும்போது, பந்து, மைதானத்தில் பட்டு திருகியபடி விலகி சென்றது. அப்படியிருந்தும், பந்து விலகிய திசையின் குறுக்கே கைகளை நீட்டி தடுத்து எல்லைக்கோட்டின் அருகே அருமையான பீல்டிங்கை வெளிப்படுத்தினார், ரெய்னா. இதனால் அந்த பந்தில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. எனவே ஆட்டத்தின் கடைசி பந்தில் டெல்லி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்து பவுண்டரியாக சென்றது. எனவே, சென்னை ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

பினிஷிங் நல்லாயிருக்கே..
தாஹீர் அடித்த 3வது பந்தை பிரமாதமாக கேட்ச் பிடித்து அந்த பந்தில் ரன் கிடைக்கவிடாமல் செய்தது, 5வது பந்தை அருமையாக பீல்ட் செய்து 2 ரன்னாக மாற்றியது என கடைசி ஓவரில் அவ்விரு பந்துகளிலும் சென்னை வெற்றியை உறுதி செய்தது ரெய்னாதான். அந்த வகையில், டோணி மற்றும் ரெய்னா ஆகியோர் கடைசி ஓவர்களில் 2 பந்துகளில் வெற்றியை மாற்றிப்போட்டனர் என்பதே நிதர்சனம். மற்ற வீரர்களின் பங்களிப்பும் பாராட்டத்தக்கதே என்றாலும், பதற்றம் நிறைந்த கடைசி ஓவரில் செய்யப்படும் செயல்கள் கவனம் ஈர்க்கவே செய்கின்றன.


Click it and Unblock the Notifications











