For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அசத்தல் பவுலிங்.. பெங்களூரை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை!

By Veera Kumar

சென்னை: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிச் சென்றாலும், பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல்லில் மொத்தமுள்ள 56 லீக் சுற்றில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் இதுவரை எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை. அனைத்து அணிகளும் வாய்ப்பில் நீடிப்பதால் தொடர்ந்து மல்லுகட்டுகின்றன.

IPL 2015: CSK vs RCB: Chennai Super Kings win toss, will bat first

இதில் 37வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சையில் இறங்கின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளதாக அறிவித்தார். இதன் படி சென்னை அணி முதலில் பேட் செய்தது.

இதனிடையே முதல் ஓவரிலேயே சென்னைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஸ்டெம்பு தெறித்து ஓட, ட்வைன் ஸ்மித் டக் அவுட் ஆனார். மெக்கல்லம் சிறிது அதிரடி காண்பித்து 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது, டேவிட் வைஸ் பந்து வீச்சில், இக்பால் அப்துல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து ரெய்னாவுடன், டுப்ளசிஸ் ஜோடி சேர்ந்தார். 12 ஓவர்கள் முடிவில் சென்னை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து நிதான தொடக்கம் கண்டது. ஆனால், அதன்பிறகும், ரன்களை குவிக்க சென்னை தவறிவிட்டது.

டுபிளெசிஸ் 24 ரன்களிலும், டோணி 29 ரன்களிலும், ஜடேஜா வழக்கம்போல சொதப்பலாக ஆடி 3 ரன்களிலும், அதிரடி காண்பித்த பவான் நேகி 13 ரன்களிலும் அவுட் ஆகினர். சென்னை அணியில், ரெய்னா மட்டுமே சிறப்பாக ஆடி 52 ரன்கள் விளாசினார். வழக்கமாக அதிரடியாக ரன் குவிக்கும் ரெய்னாவும், 46 பந்துகளில்தான் அந்த ரன்களை எட்ட முடிந்தது.

ட்வைன் பிராவோ 2 ரன்களில் அவுட் ஆன நிலையில், மோகித் ஷர்மா ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆகி பூஜ்யத்தில் வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

பெங்களூரு தரப்பில் மிட்சேல் ஸ்டார்க், 4 ஓவர்கள் பந்து வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷல் பட்டேல் மற்றும் டேவிட் வைஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூர் பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே ஈஸ்வர் பாண்டே பந்தில் ஸ்டம்பு சிதற நிக் மட்டின்சன் 4 ரன்களில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து அதிரடி காண்பித்த டிவில்லியர்ஸ், 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில், ஈஸ்வர் பாண்டே வீசிய ஃபுல்டாஸ் பந்தில் மிட்-ஆப் திசையில் நின்ற டுபிளெசிஸ் வசம் பிடிபட்டார்.

வில்லியல்ஸ் அவுட்டான அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மண்டீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகினார். இதனால், பெங்களூர் அணி, 5.2 ஓவர்களில், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், பொறுப்பாக ஆடிய கேப்டன் கோஹ்லிக்கு, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பால், ஸ்கோர் சீராக உயர்ந்தது.

ஆனால், 14வது ஓவரின் கடைசி பந்தில் 48 ரன்களில் கோஹ்லி ரன் அவுட்டான நிலையில், 14.1வது பந்தில், தினேஷ் கார்த்திக் 23 ரன்கள் எடுத்த நிலையில், நெஹ்ரா பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து எதிர்பார்க்கப்பட்ட சர்ப்ராஸ் கான் 8 ரன்களிலும், டேவிட் வைஸ் 17 ரன்களிலும், ஸ்டார்க் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். ஹர்ஷல்பட்டேல் மற்றும் இக்பால் அப்துல்லா ஆகியோர் டக் அவுட் ஆகினர்.

கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், பிராவோ பெங்களூருவின் கடைசி இரு விக்கெட்டுகளையும் முதல் நாலே பந்துகளில் வீழ்த்தினார். ஆனால் ரன் எதுவும் விட்டுக்கொடுக்கப்படவில்லை. எனவே 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. நெஹ்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறைந்த ரன்னே எடுத்தாலும், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கால் சென்னை வெற்றியை வசப்படுத்தியது. கடைசி இரு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்திருந்த சென்னைக்கு, இந்த வெற்றி பெரும் பூஸ்ட் கொடுத்துள்ளது. புள்ளி பட்டியலிலும், சென்னை முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

Story first published: Monday, May 4, 2015, 20:18 [IST]
Other articles published on May 4, 2015
English summary
Chennai Super Kings win toss, will bat first against RCB.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+