8வது ஐ.பி.எல்: 'யுவி' அசத்தல் ஆட்டம்... ஒருவழியாக முதல் வெற்றியை ருசித்தது டெல்லி டேர்டெவில்ஸ்!!
புனே: 8வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.
8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. புனே நகரில் நேற்றிரவு நடந்த தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், டெல்லி டேர்டெவில்சும் மோதின.
டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷேவாக்கும், தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜயும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

13 ஓவரில் 100 ரன்கள்..
நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்த இந்த ஜோடி 5-வது ஓவரில் பிரிந்தது. விஜய் 19 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஷேவாக்குடன், விருத்திமான் சஹா இணைந்தார். இருவரும் முடிந்த வரை ரன்களைக் குவித்தனர்.
தாஹிரின் ஒரே ஓவரில் ஷேவாக் ஒரு சிக்சரும், 2 பவுண்டரியும் விளாசினார். 13 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை தொட்டது.

20 ஓவரில் 165 ரன்கள்..
இந்த ஜோடி பிரிந்ததும் பஞ்சாப் அணியின் ரன்வேகம் குறைந்தது. சஹா 39 ரன்களிலும் ஷேவாக் 47 ரன்களிலும் வெளியேறினர்.
அதிரடிபுயல் மேக்ஸ்வெல், இம்ரான் தாஹிரின் ஒரே ஓவரில் 2 சிக்சர் அடித்த கையோடு நடையைக் கட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இம்ரான் தாஹிர்
முதல் இரு ஓவர்களில் 34 ரன்களை வாரி வழங்கிய டெல்லி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் அவர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டுமினி 2 விக்கெட்டுகளும், மேத்யூஸ், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. ஸ்ரீயாஸ் அய்யர் 5 ரன்னிலும், கேப்டன் டுமினி 21 ரன்னிலும் வெளியேறினாலும் மயங்க் அகர்வாலும், யுவராஜ்சிங்கும் டெல்லி அணிக்கு உயிர் கொடுத்தனர்.

யுவி அசத்தல்
அக்ஷர் பட்டேலின் ஓவரில் யுவி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அகர்வாலும் பஞ்சாப் பந்துகளைப் பறக்கவிட்டார். யுவராஜ்சிங் 55 ரன்கள், மயங்க் அகர்வால் 68 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

டெல்லியின் முதல் வெற்றி
டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முந்தைய இரு ஆட்டங்களில் சென்னை மற்றும் ராஜஸ்தானிடம் தோற்றிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். 3-வது லீக்கில் ஆடிய பஞ்சாப் அணிக்கு 2-வது தோல்வியாகும்.


Click it and Unblock the Notifications