Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல்.2015: 'சென்னை' சிங்கத்தை சாய்த்தது கொல்கத்தா! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

கொல்கத்தா: நடப்பு 8-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் உத்தப்பா 80 ரன்களுடனும் ரஸ்ஸல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கொல்கத்தா வெற்றிக்கு வித்திட்டனர். முன்னதாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணியில் மிக அதிகபட்சமாக மெக்கல்லம் 32, பிராவோ 30 ரன்களை எடுத்திருந்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் இதர அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையை சென்னையில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

uthappa

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சென்னையின் தொடக்க வீரர்களாக ஸ்மித், மெக்கல்லம் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார்.

தொடக்க வீரரான மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் ரெய்னா 8 ரன்களை எடுத்த நிலையில் 3.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.

சென்னையின் முன்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 5.5வது ஓவரில் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த டூபிளெஸிஸ்ஸும் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் டோணி களத்துக்கு வந்தார். டோணி 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் கிளீன் போல்டு அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6.5வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்து தடுமாறியது.

பின்னர் பிராவோ-ஜடேஜா ஜோடி சற்று நிலைத்து நின்று ரன்களை விறுவிறுவென குவித்தது. சென்னை அணி 16.3வது ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ அவுட் ஆனார். அவர் 32 பந்துகளில் 30 ரன்களில் எடுத்திருந்தார். சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து மீண்டும் விழுந்தன.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டுத் தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்ல 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணியில் பிராட் ஹக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பாவும் கேப்டன் காம்பீரும் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ரன்களை எடுத்து வந்தனர்.

4.2வது ஓவரில் மொகித் சர்மா வீசிய பந்தில் காம்பீர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது கொல்கத்தா அணி 4.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை எடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து மணீஷ் பாண்டே 3 ரன்கள் எடுத்த நிலையில் 8.2வது ஓவரில் அவுட் ஆனார். அடுத்த 9.1வது ஓவரில் யாதவ் 2 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டி கொல்கத்தா போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் தொடக்க வீரரான உத்தப்பாவுடன் கை ரஸ்ஸல் கை கோர்த்த பின்னர் இந்த ஜோடியை பிரிக்க சென்னை பெரும் போராட்டம் நடத்தியது. இருப்பினும் கடைசி 4 ஓவர்களில் முதல் 2 ஓவர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது.

வழக்கம் போல கடைசி 2 ஓவர்கள் டென்ஷன் ஓவர்களாக மாறியது. அதுவும் கடைசி ஓவர் படு த்ரில்லாக அமைந்தது. கடைசி ஓவரின் 5வது பந்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்தது கொல்கத்தா அணி. கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடக்க வீரர் உத்தப்பா 80 ரன்களுடனும் ரஸ்ஸல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கொல்கத்தா அணி வெற்றிக்கு வித்திட்டனர்.

நடப்பு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இது 4வது வெற்றியாகும். பிராட் ஹக், உத்தப்பா, ரஸ்ஸல் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றியை ருசித்தது.

Story first published: Friday, May 1, 2015, 0:05 [IST]
Other articles published on May 1, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+