பெங்களூரு: 8வது ஐ.பி.எல். போட்டியில் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அணியில் அதிகபட்சமான ரெய்னா 62 ரன்கள், பெங்களூரு அணியில் கேப்டன் கோஹ்லி 51 ரன்கள் அடித்தனர். சென்னை அணியின் நெஹ்ரா 10 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
பெங்களூருவில் லேசான மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. முன்னதாக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூர் அணியின் புயலான கெய்ல் உட்பட 3 வீரர்கள் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.. பெங்களூர் அணியில் மிட்செல் ஸ்டார்க் இன்று தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் மெக்கல்லமும் களமிறங்கினர். 1.5வது ஓவரில் 6 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 12 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் ரெய்னா களமிறங்கினார்.
8.5வது ஓவரில் ஸ்மித் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 70 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் டோணி களமிறங்கினார்.. டோணியுடன் இணைந்திருந்த ரெய்னா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.. அடுத்த சில பந்துகளிலேயே 62 ரன்களை எட்டிய நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
6 சிக்சர்கள்
ரெய்னா 6 சிக்சர்களையும் 4 பவுண்டர்களிகளையும் விளாசியிருந்தார். அப்போது சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்தது.
அதன் பின்னர் டோணி 13 ரன்களிலும் ஜடேஜா 8 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார். பின் வரிசை வீரர்களான பிராவோ, அஸ்வின், மொகித் சர்மா ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினர். டூபிளெஸ்ஸி 33 ரன்கள் மற்றும் நெஹ்ரா ரன் ஏதுவும் எடுக்காமல் அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணி வெல்வதற்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பெங்களூர் அணியின் சஹால் 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போராடிய பெங்களூர்
பின்னர் பெங்களூர் அணியின் பிஸ்லாவும் ரூசோவ்வும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் 3 ஓவர்கள் இருவரும் நிலைத்து ஆடிய நிலையில் 3.3 வது ஓவரில் பிஸ்லா 17 ரன்கள் எடுத்த நிலையில் நெஹ்ரா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக களத்துக்கு கேப்டன் கோஹ்லி வந்தார்.
அதே நேரத்தில் அடுத்த 3வது பந்தில் அதாவது 3.6வது ஓவரில் ரூசோவ் அவுட் ஆனார். அவர் 9 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் நின்ற கோஹ்லியுடன் கை கோர்த்த தினேஷ் கார்த்திக் 10 ரன்கள் எடுத்த நிலையில் 8.2வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அப்போது கோஹ்லியுடன் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இணைய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஆனால் இந்த பரபரப்பு பதற்றம் எல்லாம் தேவையில்லை என்னும் வகையில் டிவில்லியர்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இருப்பினும் கேப்டன் கோஹ்லி நிலைத்து ஆடிக் கொண்டிருந்தார். இதனிடையே சர்ப்பராஸ் கான் 11 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் கோஹ்லி அரைசதத்தை கடந்த நிலையில் 6வது விக்கெட்டாக வீழ்ந்தார். அப்போது பெங்களூர் அணி 16.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்திருந்தது.
களத்தில் இருந்த வைஸியுடன் பட்டேல் கை கோர்த்தார். ஆனால் அவர் டக் அவுட் ஆனார். இதனால் பெங்களூர் அணி 16.2 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் என்ற நிலையில் போராடியது. 19 வது ஓவர் முடில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை எட்டியது பெங்களூரு அணி.
வழக்கம் போல கடைசி ஓவர் பரபரப்பு இந்த போட்டியிலும் ஏற்பட்டது. 6 பந்துகளில் 35 ரன்கள் அடித்தால் பெங்களூருவுக்கு என்ற நிலைமை உருவானது.. ஆனால் இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணி எடுத்தது. கடைசி ஓவர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்று அவுட் ஆனார் வைஸி.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
சென்னை அணியின் நெஹ்ரா வெறும் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி சாதனை படைத்தார். அஸ்வினோ ஒரே ஒரு ஓவரை வீசி 17 ரன்களை அள்ளிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.