ஐபிஎல்லில் முதல் கிளைமாக்ஸ் நாளை ஆரம்பம்... பிளே ஆப்பில் யார் யார்?
பெங்களூரு: ஐபிஎல் தொடர் தற்போது முக்கிய கட்டமான பிளே-ஆப் சுற்றை எட்டியுள்ளது. நடப்பு 8வது ஐபிஎல் லீக் ஆட்டங்கள் மிகவும் போட்டி நிறைந்ததாக அமைந்திருந்ததால், பிளேஆப் சுற்றுக்கு யார் செல்வார்கள் என்ற கேள்விக்குறி, நேற்று கடைசி லீக் ஆட்டம்வரை நீடித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிலேயே தனது பிளே-ஆப் வாய்ப்பை இறுதி செய்தது. பஞ்சாப்பும், டெல்லியும், முதலிலேயே வெளியேற்றத்துக்கு தயாராகின.
கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்கு நடுவேதான், பிளே-ஆப்புக்கு கடும் போட்டி நிலவியது.
நேற்று நடைபெற்ற இரு லீக் ஆட்டங்கள் முடிவில் பிளே-ஆப் செல்லும் அணிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன.

புள்ளி பட்டியல்
லீக் ஆட்டங்கள் முடிவில் சென்னை 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில், முறையே 2 முதல் 4வது இடங்கள் வரை பகிர்ந்து கொண்டுள்ளன.

கடைசி இடங்கள்
கொல்கத்தா 15 புள்ளிகள், ஹைதராபாத் 14 புள்ளிகள், டெல்லி 11 புள்ளிகள், பஞ்சாப் 6 புள்ளிகள் பெற்று, நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறிவிட்டன. இதில் கொல்கத்தா அணி, நடப்பு சாம்பியன்.

பிளேஆப் அணிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பிளேஆப்புக்கு முன்னேறியுள்ளன. பிளேஆப் ரவுண்ட் நாளை முதல் தொடங்க உள்ளது.

முதல் ஆட்டம்
நாளை நடைபெறும் பிளேஆப் குவாலிஃபையர் -1 ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், 2வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இடம்: மும்பை வான்கடே ஸ்டேடியம். இந்த ஆட்டத்துக்கு புதன்கிழமை, ரிசர்வ் நாளாகும் (மாலை 4 மணி). இதில் ஜெயிக்கும் அணி பைனலுக்குள் செல்லும்.

எலிமினேட்டர்
20ம்தேதி, புதன்கிழமை, இரவு 8 மணிக்கு, புனே, எம்.சி.ஏ ஸ்டேடியத்தில் தொடங்கும் எலிமினேட்டர் போட்டியில், 3வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும், 4வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது.

இரண்டாவது மோதல்
22ம் தேதி வெள்ளிக்கிழமை, இரவு 8 மணிக்கு ராஞ்சி ஸ்டேடியத்தில் தொடங்கும் குவாலிஃபையர்-2 போட்டியில், குவாலிஃபையர் 1வது போட்டியில் தோற்ற அணியும், எலிமினேட்டரில் வென்ற அணியும் மோத வேண்டும். அதில் வெல்லும் அணியே பைனலுக்குள் செல்லும்.

பைனல்
24ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் பைனல் போட்டியில், குவாலிஃபையர் 1 மற்றும் குவாலிஃபையர் 2 ஆகியவற்றில் வெற்றி பெற்ற அணிகள் மோதி, கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை முடிவு செய்யும்.


Click it and Unblock the Notifications