10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்ற கொல்கத்தாவின் பயணத்தை தடுக்குமா பெங்களூரு?
கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட்டில், இன்று 8 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. கடைசி 3 சீசன்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றும், கடந்த தொடரில் இருந்து தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலமான அணியாக வலம் வருகிறது.

வெற்றி பயணம்
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லிக்கு எதிராக ஆரம்பித்த கொல்கத்தாவின் வெற்றி பயணம், இந்தாண்டு மும்பைக்கு எதிராக நடந்த முதல் போட்டிவரை தொடருகிறது.

டிவில்லியர்ஸ், கெயில்
அதேநேரம், பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் என நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அந்த அணியின் பேட்டிங் லைன் வலுவாக உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தால் இமாலய ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு தடுமாற்றம்
இருப்பினும், பெரிய வீரர்கள் அணியில் இருந்தும் தங்களது திறமையை நிரூபிக்கத் தவறியதால் 2009, 2011 ஐபிஎல் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி பறிகொடுத்தது. எனவே, இந்த முறை அவற்றுக்கு எல்லாம் பதில் சொல்வதுபோல் பெங்களூரு அணியின் செயல்பாடு இருக்கும் என நம்பலாம். கொல்கத்தா அணி வீரர்களும் இதற்கு பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளனர்.

கொல்கத்தாவிலும் பேட்டிங் வலு
கடந்த 8ம் தேதி நடந்த மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கம்பீர் (57 ரன்கள்), மணீஷ் பாண்டே (40 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (46* ரன்கள்) ஆகியோரின் பங்களிப்பில் 169 ரன்களை எளிதாக சேஸ் செய்தது கொல்கத்தா. எனவே இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இந்த ஆட்டம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications