ராஜ்கோட்: கொல்கத்தா கேப்டன் காம்பீர், கிறிஸ் லின் அதிரடியால் குஜராத் லயன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது கொல்கத்தா.
ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரில் பங்கேற்றதால், குறைந்தபட்சம் 2 வாரங்களாவது ஓய்வு எடுக்கும்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் லயன்ஸ் அணியின் மற்றொரு முன்னணி ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோவும் காயம் அடைந்துள்ளார். இவர்கள் இருவரும் இல்லாதது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த 10வது ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர் கொண்டது குஜராத் லயன்ஸ். இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 47 ரன்களும், ரெய்னா ஆட்டம் இழக்காமல் 68 ரன்களும் எடுத்தனர்.

இதன் பின்னர் 184 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திச் சென்ற கொல்கத்தா அணிக்கு அசத்தல் ஓபனிங் தந்தனர் காம்பீர், கிறிஸ் லின் ஜோடி. முதல் பந்தில் இருந்தே அதிரடியை காட்டத் துவங்கி கிறிஸ் லின் குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் அத்தனை பந்துகளையும் அடித்து விளாசி தள்ளினார். அதேபோல் சலிக்காமல் மறுமுனையில் காம்பீரும் வெளுத்து வாங்கினார். குஜராத் பவுலிங் படு மோசமாக இருந்தது.
கவுசிக் வீசிய 6 - வது ஓவரில் காம்பீர் 4 பவுண்டரி அடித்தார். குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்ட லின், ஸ்மித் வீசிய 7வது ஓவரில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்ததன் மூலம் 19 பந்தில் எளிதில் அரைசதம் கடந்தார்.
தொடந்து அசத்திய காம்பீர் ஐபிஎல் அரங்கில் தனது 32 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க குஜராத் பந்து வீச்சாளர் மேற்கொண்ட அனைத்து யுக்திகளும் பலிக்கவில்லை. இதையடுத்து 14.5 ஓவரில் 184 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றது.
48 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்த காம்பீர், 41 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உதவியோடு 93 ரன்கள் குவித்த கிறிஸ் லின் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் டி20 அரங்கில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிக ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை கொல்கத்தா படைத்தது. ஆட்டநாயகன் விருது கிறிஸ் லினுக்கு வழங்கப்பட்டது.