தோனிக்கு சிஎஸ்கே-ன்னா ரொம்ப பிடிக்கும்.. ரெஸ்ட் எடுக்கிறது கஷ்டம்.. கொளுத்திப் போட்ட மைக் ஹஸ்ஸி!
சென்னை : தோனிக்கு ஓய்வு கொடுப்பது "ரொம்ப கஷ்டம்" என்று கூறியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி.
ஏன் தோனி ஓய்வு எடுக்க மாட்டார் என்பது குறித்து வெளிப்படையாக விளக்கமும் கொடுத்துள்ளார் மைக் ஹஸ்ஸி.

தோனிக்கு காயம்
தோனிக்கு முதுகில் நரம்புப் பிடிப்பு இருக்கிறது. இதனால், சில போட்டிகளில் பேட்டிங் செய்த போது சிரமத்துக்கு உள்ளானார். பின்னர் ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டார். அந்தப் போட்டியில் சென்னை மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இது சரியா?
அதன் பின் முதுகுப் பிரச்சனை முழுமையாக குணமாகாத நிலையில், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஐபிஎல் தொடரை அடுத்து 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தோனி ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் ஆடுவது சரியா? என சிலர் கேட்டு வருகின்றனர்.

தவறவிட விரும்ப மாட்டார்
சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியான நிலையில் அவர் ஓய்வு எடுத்துக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதே சிலரின் கருத்தாக உள்ளது. இது குறித்து மைக் ஹஸ்ஸியிடம் கேட்ட போது, "இந்த கேள்வியை நீங்கள் தோனியிடம் தான் கேட்க வேண்டும். அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த வரை அவர் போட்டிகளை தவறவிட விரும்ப மாட்டார்" என்றார்.

சிஎஸ்கே ரொம்ப பிடிக்கும்
அடுத்து அவர் கொடுத்த விளக்கம் தான் முக்கியமானது. "அவர் சிஎஸ்கே அணிக்காக ஆடுவதை விரும்புகிறார். இந்த இடம் அவரது இதயத்துக்கு அருகே உள்ளது. அவர் நன்றாக ஆடவேண்டும், தன் அணி வெல்ல வேண்டும் என நினைக்கிறார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பது கடினம்" என்றார்.

தோனி எதிர்ப்பாளர்கள்
ஏற்கனவே, தோனி எதிர்ப்பாளர்கள் என்னடா காரணம் கிடைக்கும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஹஸ்ஸி வேறு "சிஎஸ்கே-வுக்காக தோனி ஓய்வெடுக்காமல் ஆடுகிறார்" என்ற பாணியில் கூறிவிட்டார். அப்படி என்றால் இந்திய அணி முக்கியமில்லையா? உலகக்கோப்பைக்கு காயத்தோடு போவாரா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகிறது. தோனி எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications