அஸ்வின் செய்ததில் எந்த தவறும் இல்லை! பாயின்ட்.. பாயின்ட்டாக விளக்கம் அளித்த “பெஸ்ட்” அம்பயர்!
டெல்லி : 2019 ஐபிஎல் தொடரில் அஸ்வின் செய்த மன்கட் முறை ரன் அவுட் கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்போது அதன் தாக்கம் ஓரளவு ஓய்ந்து இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் எங்கே நம்மை மன்கட் விக்கெட் செய்து விடுவார்களோ என அஞ்சி கிரீஸ்-க்குள் நின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், முன்னாள் அம்பயரும், பல முறை சிறந்த அம்பயர் விருது வென்றவருமான சைமன் டோஃபல், அஸ்வின் செய்தது சரியே என நீண்ட விளக்கத்துடன் அதை ஆதரித்து தன் கருத்தை கூறி உள்ளார்.

அஸ்வினுக்கு ஆதரவு
அஸ்வினுக்கு கிரிக்கெட் உலகில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிறந்த முன்னாள் அம்பயர் ஒருவர் அதை ஆதரித்து பேசி இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்தது. அஸ்வின் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் குறிப்பிட்டு தன் விளக்கத்தை அளித்தார் சைமன்.

விதி முக்கியம்
அஸ்வின் மன்கட் ரன் அவுட் செய்யும் முன் முதலில் எச்சரித்து இருக்க வேண்டும். அப்படி செய்யாமல், விளையாட்டு தர்மத்தை மீறினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. இதற்கு ஐசிசி விதிப்படி தான் ரன் அவுட் செய்யப்பட்டது என விளக்கம் அளித்த சைமன், விளையாட்டு தர்மம் என்பது எழுதப்பட்ட விதியையும், அதன் பயன்பாட்டையும் மீறியதாக இருப்பது முரண்பாடான விஷயம் என கூறினார்.

எல்லாமே திட்டம் தான்!!
அஸ்வின் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு சென்ற பின் ரன் அவுட் செய்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இதற்கு விளக்கம் அளித்த சைமன், "அஸ்வின் இதை திட்டமிட்டு செய்தார் என கூறுகிறார்கள். அப்படி என்றால் பந்துவீச்சாளர்கள் எல்.பி.டபுள்யூ, கேட்ச் அல்லது எந்த வகையான விக்கெட் வீழ்ச்சி செய்தாலும் அது திட்டமிட்டது தானே? எனவே, அந்த வாக்குவாதம் சரியல்ல" என்றார்.

டெட் பால் குழப்பம்
மேலும், இந்த பந்தை "டெட் பால்" என அறிவித்து இருக்க வேண்டும் என ஷேன் வார்னே உள்ளிட்டோர் கூறி இருந்தனர். ஆனால், பந்து வெளியேறும் விதத்தை வைத்து தான் அதை சொல்ல முடியும் என கூறினார். இந்த விவகாரத்திற்குப் பின் அஸ்வினை தான் தொடர்பு கொண்டேன் எனவும் கூறினார் சைமன்.

அஸ்வினிடம் பேசிய சைமன்
பலரும் அப்போது அஸ்வின் தர்மத்தை மீறி விட்டார் என கூறி வந்த நிலையில், அஸ்வினுக்கு சக மனிதராக தன் ஆதரவை தெரிவிக்கவும், அவர் அந்த கருத்துக்களால் பாதிப்படையவில்லை என உறுதி செய்து கொள்வதற்காகவும் தொடர்பு கொண்டதாக கூறிய சைமன், அப்போது அஸ்வின் செய்ததில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications