
தேர்தல் வருகிறது
2019 ஏப்ரல் - மே'இல் தான் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய திட்டப்படி ஐபிஎல் 2019 சீசன் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது. அப்படி நடந்தால், மத்திய அரசு அல்லது எதிர்க் கட்சிகள் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள், கட்சிகளின் தொல்லைகள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அதனால் ஐபிஎல் இந்தியாவில் தான் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அல்லது தென்னாபிரிக்காவில் ஐபிஎல் தொடர் நடைபெறலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

உலகக்கோப்பைக்கு ஏற்ப திட்டம்
தேர்தல் முக்கிய பிரச்சனை என்றால், உலகக்கோப்பை அடுத்த பிரச்சனையாக உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை, வரும் 2019 மே மாத இறுதியில் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடர் மே 19இல் தான் முடிவடையும். அதனால், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்களை மே 1 முதல் ஐபிஎல் ஆட அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏலத்தில் யாரை எடுக்கலாம்?
இந்த சூழ்நிலைகளில் ஐபிஎல் அணிகள் எந்த வீரரை ஏலத்தில் எடுக்கலாம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களை புதிதாக ஏலத்தில் எடுக்காமலும், ஏற்கனவே அணியில் உள்ள அந்த நாட்டின் வீரர்களுக்கு ஏற்ற மாற்று வீரர்களை தேர்வு செய்வதிலும் அணிகள் ஆர்வம் காட்டக் கூடும்.

சீக்கிரமே ஆரம்பிக்குமா ஐபிஎல்?
உலகக்கோப்பைக்கு ஏற்ப இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் 15 நாட்கள் முன்னதாகவே தொடங்க ஒரு திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், அனைத்து நாடு வீரர்களும் ஐபிஎல் தொடர் முடியும் வரை ஆட வாய்ப்பு ஏற்படும்.
ஆக மொத்தத்தில்,ஐபிஎல் அணிகள் ஒரு நிச்சயமற்ற சூழலில் தான் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications