ஐபிஎல்-இல் விக்கெட் வேட்டை நடத்திய வீரர்கள்.. டாப் 5இல் இந்திய அணியில் இடம் கிடைக்காத 3 வீரர்கள்!!
மும்பை : 2019 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23 முதல் களைகட்டப் போகிறது. அதற்கு முன் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த டாப் 5 வீரர்கள் யார்? என பார்க்கலாம்.
இந்த டாப் 5இல் மூன்று இந்திய வீரர்களும் உண்டு. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பல்வேறு நியாயமான காரணங்கள் இருந்தாலும், இது ஆச்சரியமளிக்கும் விஷயமாகவே உள்ளது. விக்கெட் வேட்டை நடத்திய டாப் 5 வீரர்கள் -

#5 - ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் 149 போட்டிகளில் 134 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் ஆடிய அவர், கடந்த சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

#4 - டிவைன் பிராவோ
கடந்த 2011 முதல் சென்னை அணிக்காக ஆடி வரும் பிராவோ, அதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்தார். 2013 மற்றும் 2015 சீசன்களில் அதிக விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சாதனை செய்தார். இவர் ஒட்டுமொத்தமாக 122 போட்டிகளில் 136 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

#3 - பியுஷ் சாவ்லா
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் சத்தமில்லாமல் மூன்றாம் இடம் பிடித்துள்ள பியுஷ் சாவ்லா, கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். அவர் 144 போட்டிகளில் 140 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

#2 - அமித் மிஸ்ரா
ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விக்கெட் வீழ்த்தி வரும் வீரர் என்றால் அது அமித் மிஸ்ரா தான். சீசனுக்கு 13 விக்கெட்களை சராசரியாக வீழ்த்தி இருக்கிறார் அமித் மிஸ்ரா. இவர் 136 போட்டிகளில் 146 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

#1 - லசித் மலிங்கா
இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளவர் மலிங்கா. பெரும் அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளரான மலிங்கா, 110 போட்டிகளில் 154 விக்கெட்கள் சாய்த்துள்ளார். மேலே உள்ள நான்கு வீரர்களை விட குறைந்த போட்டிகளே ஆடி, அவர்களை விட அதிக விக்கெட்களை அள்ளி இருக்கிறார் மலிங்கா.


Click it and Unblock the Notifications