சிக்ஸ்-க்கு ஆசைப்பட்டு நொந்து போன பெங்களூர் ரசிகர்கள்.. அதுக்கு காரணம் இந்த சிஎஸ்கே வீரர் தான்!!
Recommended Video
பெங்களூர் : சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை வீரர் டு ப்லேசிஸ் அருமையாக இரண்டு கேட்ச்களை பிடித்தார். மேலும், ஒரு கேட்ச் பிடிக்க உதவி செய்தார்.
இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டி வில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல் பேட்டிங் செய்து வந்தனர்.

சரியான கணிப்பு
டி வில்லியர்ஸ் 25 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். அப்போது ஜடேஜா வீசிய 7வது ஓவரின் 5வது பந்தை தூக்கி அடித்தார் டி வில்லியர்ஸ். பந்து சிக்ஸ் செல்லுமா என அனைவரும் ஆவலுடன் இருக்க, டு ப்லேசிஸ் பந்தை சரியாகக் கணித்து, பவுண்டரி கோட்டின் அருகே நின்று பந்தை பிடித்தார்.

2வது கேட்ச்
அடுத்து, அதே ஜடேஜா பந்துவீச்சில் 13வது ஓவரில் அக்ஷ்தீப் நாத் உயர அடித்த பந்தை பவுண்டரிக்கு சில அடி தூரம் முன்பு கேட்ச் பிடித்தார் டு ப்லேசிஸ். அக்ஷ்தீப் நாத் 24 ரன்களில் வெளியேறினார்.

கடைசி நுனியில்..
அடுத்து, இம்ரான் தாஹிர் வீசிய 17வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தை தூக்கி சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். இப்போது பவுண்டரியின் கடைசி நுனி வரை சென்ற டு ப்லேசிஸ், பந்தை பிடித்த அதே கணத்தில் அருகில் இருந்த பீல்டர் ஷோரி வசம் தூக்கி வீசினார்.

மூன்று விக்கெட்கள்
ஷோரி பந்தை சரியாக கேட்ச் பிடிக்க, ஸ்டாய்னிஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். டு ப்லேசிஸ்-இன் அருமையான பவுண்டரி எல்லை கேட்ச்களால் சென்னை அணிக்கு மூன்று விக்கெட்கள் கிடைத்தது. பெங்களூர் அணியின் ரன் குவிப்பும் கட்டுக்குள் வந்தது.

நொந்து போன ரசிகர்கள்
டு ப்லேசிஸ் கேட்ச்களால் சென்னை ரசிகர்கள் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் குஷியாகினர். ஆனால், பெங்களூர் ரசிகர்கள், மூன்று முறையும் பந்து சிக்ஸருக்கு செல்கிறது என நினைத்து, "சிக்ஸ் போக வேண்டிய பந்தை கேட்ச் பிடிக்கிறாரே" என நொந்து போனார்கள்.


Click it and Unblock the Notifications