தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே.. பரவும் வதந்தி.. உண்மை என்ன?
Recommended Video
கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.
2019 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் மற்ற அணிகளை கதிகலங்க வைத்த அதிரடி அணியாக விளங்கியது கொல்கத்தா. எத்தனை பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் அதை எட்டுவோம் என ரஸ்ஸல் புண்ணியத்தில், கெத்து காட்டியது.

தொடர்ந்து தோல்விகள்
ஆனால், கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது கொல்கத்தா அணி. பந்துவீச்சில் ரன்களை அதிகம் கொடுப்பது, மிடில் ஆர்டர் பேட்டிங் என சிறிய பிரச்சனைகளாக துவக்கத்தில் இருந்த சில விஷயங்கள், இப்போது தலைவலியாக மாறி உள்ளது.

பரவும் வதந்தி
இந்த தொடர் தோல்விகளை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் பாதி தொடரிலேயே நீக்கப்படுவார் என வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தி பரவ என்ன காரணம்?

ராஜஸ்தான் உதாரணம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சமீபத்தில் இதே போன்ற தொடர் தோல்விகளை காரணம் காட்டி ரஹானேவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தனர்.

பிளே-ஆஃப் வாய்ப்பு
அதே போல, கொல்கத்தா அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு அடுத்த நான்கு போட்டிகளில் வென்றால் மட்டுமே உறுதியாகும் என்ற நிலையில், கேப்டனை பாதி தொடரில் மாற்றினால், அணி வெற்றி பெறும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா செயல்படலாம் என கூறப்படுகிறது.

மறுப்பு
ஆனால், இந்த வதந்திகளை அந்த அணியின் பயிற்சியாளர் காலிஸ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் நாங்கள் தோற்று இருக்கிறோம். ஒரு மாற்றம் தேவை என்பதால், வீரர்களுக்கு ஓய்வு அளித்துள்ளோம். மற்றபடி, கேப்டன் மாற்றம் குறித்தெல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications