கொரோனா ஆட்டம் போடும் போது.. இந்த ஆட்டம் தேவையா? இத்தாலியை உதாரணம் காட்டி வழக்கு.. சிக்கலில் ஐபிஎல்!
சென்னை : 2020 ஐபிஎல்-ஐ நடத்த அனுமதிக்கக் கூடாது என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வருகிறது.
இந்த சூழ்நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29 முதல் துவங்கி மே 24 வரை நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி வரை ஐபிஎல் சிறப்பாக நடைபெறும் என்று தான் அனைவரும் எண்ணி வந்தனர். ஆனால், மார்ச் துவக்கத்தில் இருந்து ஐபிஎல் நடக்குமா? என்ற சந்தேகம் எழத் துவங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு
அதற்கு காரணம், கொரோனா வைரஸ். கடந்த ஜனவரி மாதம் முதல் சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவத் துவங்கி உள்ளது. சில நாட்கள் முன்பு இருந்து இந்தியாவிலும் கொரோனா பரவத் துவங்கி உள்ளது.

பீதியில் பிசிசிஐ
மிகப் பெரும் செலவு செய்து நடத்தப்படும் ஐபிஎல் தொடர் தடைபட்டால் பல நூறு கோடிகள் நஷ்டம் ஆகும். சுமார் 2,000 கோடி வருமானம் பாதிப்படையும். மேலும், எதிர்காலத்தில் அது பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கும். அதனால், பிசிசிஐ பீதியில் இருக்கிறது.

பாதுகாப்பு
கொரோனா பரவும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் தொடரில் ஆட வைப்பது ஒரு சிக்கலாக உள்ளது. மறுபுறம், மைதானத்தில் கூடும் பல ஆயிரம் ரசிகர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதித்து உள்ளே அனுப்ப வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது பாதுகாப்பு குறைபாடாக கருதப்படும்.

இத்தாலியில் தடை
இந்த நிலையில், இத்தாலியில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அங்கே விளையாட்டுத் தொடர்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து வெறியர்கள் கொண்ட அந்த நாட்டில் முதலில் ரசிகர்கள் இல்லாத அரங்கில் போட்டிகள் நடந்து வந்தது. ஆனால், தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் அலெக்ஸ் பென்சிங்கர் என்ற வழக்கறிஞர் ஐபிஎல்-லுக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் பரவி வருவதால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரி உள்ளார் அவர்.

மருந்து இல்லை
உலக சுகாதார நிறுவனத்தின் தளத்தில் கோவிட்-19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ்-ஐ தடுக்கவோ, குணப்படுத்தவோ எந்த குறிப்பிட்ட மருந்தும் இருப்பதாக கூறப்படவில்லை என்பதை அவர் தன் வழக்கில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

முக்கிய உதாரணம்
மேலும் தன் மனுவில் உலகின் மிகப் பழமையான கால்பந்து தொடர் இத்தாலியில் ஏப்ரல் 3 வரை தடை செய்யப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார். இது மிக முக்கிய உதாரணம் ஆகும். உலகம் முழுவதுமே பல சிறிய விளையாட்டுத் தொடர்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பதில் இல்லை
இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் கூறுகையில், பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நடத்தக் கூடாது என குறிப்பிட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வழக்கை தொடர்ந்து இருப்பதாக அவர் கூறி உள்ளார்.

சிக்கலில் ஐபிஎல்
இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் எழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு பிசிசிஐ விளக்கம் அளிக்க நேரிடும். 2020 ஐபிஎல் சிக்கல் இன்றி நடக்குமா?


Click it and Unblock the Notifications