
தோனி ஓய்வு
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

முடிவுக்கு வரும் ஐபிஎல்
தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வரும் தோனி பேட்டிங் செய்ய திணறி வருகிறார். அவரால் அடுத்த சீசனில் ஆட முடியுமா? என்பது சந்தேகமே. கிட்டத்தட்ட தோனியின் ஐபிஎல் கேரியரும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தோனி அடுத்த கட்ட திட்டங்களை செய்து விட்டார்.

இயற்கை விவசாயம்
லாக்டவுன் சமயத்தில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிய தோனி, இயற்கை உரங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியானது. விவசாயம் சார்ந்த பொருட்களை விற்கும் நிறுவனமாக அது செயல்படும் என கூறப்பட்டது.

திரைப்படம் - வெப் சீரீஸ்
அத்துடன் தோனி பாலிவுட்டில் காலடி வைக்க உள்ளார் என்றும், தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார் என்றும் கடந்த ஓராண்டாக சில தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அந்த தகவல் உறுதியாகி உள்ளது. தோனி வெப் சீரிஸ் தயாரிக்க உள்ளார்.

பிரம்மாண்ட வெப் சீரீஸ்
இந்தியாவின் பிரம்மாண்ட வெப் சீரீஸ் ஆக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெப் சீரிஸ் அனைத்துமே குறைந்த பட்ஜெட்டில் தான் தயாராகி வந்தன. அதற்கு காரணம், சந்தா கட்டி வெப் சீரீஸ் பார்க்கும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது தான். லாக்டவுனுக்கு பின் அந்த நிலை மாறி வருகிறது.

சாக்ஷி தோனி தேர்வு செய்த கதை
இந்த நிலையில் பணத்தை வாரி இறைத்து வெப் சீரிஸ் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் தோனி. அதுவும் அகோரி பற்றிய கதையை தான் முதலில் தயாரிக்க உள்ளார் தோனி. அவரின் மனைவி சாக்ஷி தான் இந்த கதையை தேர்வு செய்தாராம்.

நாவல்
"தி ஹிடன் ஹிந்து" (The Hidden Hindu) என்ற வெளியிடப்படாத நாவலை மையமாக வைத்தே இந்த வெப் சீரீஸ் தயாராக உள்ளது. இது அகோரி ஒருவரை பற்றிய கதை. மர்மம் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் கலந்து விறுவிறுப்பான கதை என்பதால் இதை தேர்வு செய்துள்ளார் சாக்ஷி.

சத்ய யுகத்தை சேர்ந்த அகோரி
இந்த நாவலின் கதை வெளியாகி உள்ளது. இதில் வரும் அகோரி சத்ய யுகத்தை சேர்த்தவர். பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இதுவரை மறைந்து இருந்த அவர் தற்போது வெளிப்படுகிறார். அவரை சுற்றியே கதை நகரும்.

டைம் ட்ராவல்
இந்த கதையில் சில கதாபாத்திரங்கள் டைம் ட்ராவலை மையமாக வைத்தும் இடம் பெற்றுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் சம்பவங்களை வைத்து நடக்கும் கதை என்பதால் பிரம்மாண்டமாக இந்த வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறார் தோனி.

சஸ்பென்ஸ் கதை
இது சஸ்பென்ஸ் கதை என்பதால் இன்றைய தலைமுறை இளைஞர்களை எளிதாக ஈர்க்கும் என கருதப்படுகிறது. வெப் சீரிஸ் என்பதால் வெளிநாட்டு மக்களையும் ஈர்க்க முடியும். தோனியின் இந்த மெகா வெப் சீரிஸ் பற்றி இப்போதே பரபரப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications