
சிஎஸ்கே - பஞ்சாப் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 18வது போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணி துபாய் ஆடுகளத்தில் வென்று வரும் நிலையில் பஞ்சாப் அந்த முடிவை எடுத்தது.

மாற்றம் இல்லை
சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் மாற்றம் செய்தும் வெற்றி பெறவில்லை., இந்த நிலையில், பஞ்சாப் போட்டியில் அதே அணியுடன், மாற்றம் எதுவும் செய்யாமல் களமிறங்கியது சிஎஸ்கே அணி. பஞ்சாப் அணியில் கருண் நாயர், கிருஷ்ணப்பா கௌதம், ஜேம்ஸ் நீஷம் என மூன்று வீரர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் மந்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஜோர்டான் சேர்க்கப்பட்டனர்.

நல்ல துவக்கம்
பஞ்சாப் அணிக்கு மீண்டும் கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் நல்ல துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். அகர்வால் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராகுல் நங்கூரம் போட்டு ஆட, மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவித்தனர்.

அதிரடி ரன் குவிப்பு
அதிரடி ஆட்டம் ஆடி மந்தீப் சிங் 27, நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 63 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 11, சர்ப்ராஸ் கான் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே பந்துவீச்சு
பஞ்சாப் அணி தொடர்ந்து ஓவருக்கு 9 ரன்கள் என்ற அளவில் ஆடினாலும், அந்த அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை. அந்த வகையில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தாக்குர் ஒரே ஓவரில் எடுத்த 2 விக்கெட்கள் கடைசி நேரத்தில் ரன் குவிப்பு நிறுத்தியது.

சிஎஸ்கே கேள்வி
அடுத்து 179 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது சிஎஸ்கே அணி. கடந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி சேஸிங் செய்ய முடியாமல் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இந்தப் போட்டியில் சிஎஸ்கே என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி எழுந்தது.

வாட்சன் - டுபிளெசிஸ்
துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ் முதல் ஓவரில் இருந்தே பவுண்டரி அடிக்கத் துவங்கினர். அப்போதே சிஎஸ்கே அணியின் மனநிலை மாறி இருப்பது நன்றாக தெரிந்தது. தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர்.

பஞ்சாப் முயற்சி வீண்
அவர்களை பிரிக்க பஞ்சாப் எடுத்த முயற்சிகள் எந்த பலனையும் அளிக்கவில்லை. தொடர்ந்து ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன் ரேட்டில் ரன் குவித்தது வாட்சன் - டுபிளெசிஸ் ஜோடி. 17.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது இந்த ஜோடி.

ரன் குவிப்பு
துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து இருந்தார். 11 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தார். பாப் டுபிளெசிஸ் 53 பந்துகளில் 87 ரன்கள் குவித்து இருந்தார். அவர் 11 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்தார்.

சிஎஸ்கே வெற்றி
சிஎஸ்கே அணி 17.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. யாரும் எதிர்பாராத வகையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. முந்தைய தோல்விகளை மறக்க வைத்தது சிஎஸ்கே.


Click it and Unblock the Notifications











