கோலி, ஏபிடியை முந்தி.. வாயை பிளக்க வைத்த அறிமுக வீரர்.. ஆனால் டீமில் இடம் இல்லை.. என்ன நியாயம்?
அபுதாபி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலியோ, ஏபி டிவில்லியர்ஸோ இல்லை.
நடப்பு சீசனில் அறிமுகம் ஆன இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் தான் அந்த அணியில் அதிக ரன் குவித்த வீரர்.
மேலும், அறிமுக வீரராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை செய்த அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்காதது பற்றி இந்த சாதனைகளின் முடிவில் விமர்சனம் எழுந்துள்ளது.

தேவ்தத் படிக்கல் ஆட்டம்
பெங்களூர் அணியில் கடந்த சீசன்களில் துவக்க வீரராக பார்த்திவ் பட்டேல் ஆடி வந்தார். 2020 ஐபிஎல் தொடரில் அவரை நீக்கி விட்டு இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அணியில் துவக்க வீரராக இடம் பெற்றார். தன் அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் படிக்கல்.

பெங்களூர் அணி நிலை
2020 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த இரண்டு சீசன்களில் அந்த அணி பிளே-ஆஃப் முன்னேறாத நிலையில் இது பெரிய முன்னேற்றம். இதற்கு முக்கிய காரணம் தேவ்தத் படிக்கல் தான்.

அதிக ரன்கள்
ஆம், இந்த சீசனில் பெங்களூர் அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர் தேவ்தத் படிக்கல் தான். அவர் 14 போட்டிகளில் 472 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 460 ரன்களுடன் இடம் பெற்றுள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் 398 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

சாதனை
இதன் மூலம் சாதனையும் செய்துள்ளார் படிக்கல். ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த உள்ளூர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தேவ்தத் படிக்கல். இது அரிய சாதனையாகும். பல அனுபவம், முன்னணி வீரர்களை விட அதிக ரன்கள் குவித்துள்ளார்.

அதிக அரைசதம்
மேலும், தன் முதல் ஐபிஎல் சீசனில் அவர் ஐந்து அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம், சர்வதேச போட்டிகளில் ஆடாத நிலையில் தங்கள் அறிமுகப் போட்டியில் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த நான்கு சதங்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார் படிக்கல்.

கோலி, டிவில்லியர்ஸ் அணியில்..
விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் பெங்களூர் அணியில் ஒரு இளம் வீரர் அவர்களை விட அதிக ரன்கள் குவித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதில் மற்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்தியா அணியில் இடம் இல்லை
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

விரைவில் இடம் கிடைக்கும்
எனினும், தேவ்தத் படிக்கல் உச்சகட்ட பார்மில் இருப்பதால், அதை அடுத்து உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்தால் விரைவில் இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பெறுவார் என முன்னாள் வீரர்கள் பலர் அவரை பாராட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications