சண்டையே வேணாம்.. உனக்கு 2.. எனக்கு 2.. ஐபிஎல் டீமை பங்கு போட்ட முதலாளிகள்.. இது எப்படி இருக்கு?
டெல்லி : சமீபத்தில் நல்ல முன்னேற்றம் கண்ட ஒரு ஐபிஎல் அணிக்கு இரண்டு உரிமையாளர்கள் உள்ளனர்.
அவர்கள் எந்த சண்டை சச்சரவும் இன்றி அந்த அணியை பங்கு போட்டு நடத்தி வருவது தான் ஆச்சரியம்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி கைமாறும். இப்படி ஒரு அணியை நடத்தினால் அது முன்னேறுமா? ஆம், முன்னேறும் என நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். அந்த அணி டெல்லி கேபிடல்ஸ்.

ஊசலாடிய டெல்லி
டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் அந்த அணி 2008 முதல் செயல்பட்டு வந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த அந்த அணி 2019 வரை இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை. பல ஆண்டுகளாக பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறாமல் ஊசலாடி வந்தது டெல்லி.

உள்ளே வந்த ஜிண்டால்
ஜிம்ஆர் குழுமம் தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை நடத்தி வந்தது. அப்போது 2018இல் அந்த அணியின் 50 சதவீத பங்குகளை வாங்கினார் ஜிண்டால் சவுத் வெஸ்ட் (ஜேஎஸ்டபுள்யூ) குழுமத்தின் இயக்குனர் பார்த் ஜிண்டால்.

ஒப்பந்தம்
ஜிம்ஆர் குழுமம் - ஜேஎஸ்டபுள்யூ இடையே ஒரு ஒப்பந்தம் அப்போது போடப்பட்டது. அதாவது மற்ற ஐபிஎல் அணிகளைப் போல உரிமையாளர்கள் ஒவ்வொரு முடிவையும் சேர்ந்து எடுக்காமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவர் அணியின் செயல்பாட்டை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

நிர்வாகம்
அடுத்த உரிமையாளர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணியை கவனித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். வீரர்கள் தேர்வு, நிர்வாக ஆட்கள் தேர்வு, விளம்பர ஒப்பந்தம் வரை எல்லாமே யாருடைய கட்டுப்பாட்டில் அணி உள்ளதோ அவரே தான் எடுக்க வேண்டும்.

பெயர் மாற்றம்
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் டெல்லி அணி ஜிண்டால் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பார்த் ஜிண்டால் அணியை கவனித்து வந்தார். அவர் வந்த பின் தான் அணியில் பெயர் டெல்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வீரர்கள்
ஷிகர் தவான், இஷாந்த் சர்மா ஆகியோரை 2019இல் வளைத்த அவர், ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக தொடரச் செய்து, கங்குலியை ஆலோசகராக நியமித்தார். 2020இல் கங்குலி உதவியுடன் ரஹானே, அஸ்வின் என இரண்டு அனுபவ வீரர்களை டெல்லி அணிக்கு மாறச் செய்தார்.

நல்ல முன்னேற்றம்
ஜிண்டால் கட்டுப்பாட்டில் இருந்த டெல்லி அணி 2௦19ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 2020இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இது டெல்லி அணிக்கு பெரிய முன்னேற்றமாகும். ஆனால், இத்துடன் பார்த் ஜிண்டால் கட்டுப்பாட்டில் அணி விலகியது.

இரு சீசன்கள்
தற்போது 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களை டெல்லி கேபிடல்ஸ் அணி ஜிம்ஆர் குழுமத்தின் கட்டுப்பாட்டில் சந்திக்க உள்ளது. ஜிண்டால் குழுமம் நல்ல இடத்தில் அணியை விட்டுச் சென்றுள்ள நிலையில், அதை ஜிஎம்ஆர் அப்படியே தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மெகா ஏலம்?
தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் செயல்படுகிறது. ரிஷப் பண்ட், ஷிகர் தவான், அஸ்வின், ரஹானே, ரபாடா, அன்ரிச் நோர்ஜே என பல நல்ல வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கும் பட்சத்தில் ஜிஎம்ஆர் குழுமம் அணியை எப்படி மாற்றி அமைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications