
2019 உலகக்கோப்பை தொடர்
2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் இன்று வரை வரவில்லை. இடையே தோனி இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட இடம் பெறவில்லை. அது குறித்தும் பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன.

என்ன சொல்லப்பட்டது?
தோனி இளம் வீரர்களுக்கு வழி விட்டு தற்காலிக ஓய்வில் இருக்கிறார் என சிலர் கூறினார்கள். இந்திய அணி நிர்வாகம் தோனியை தாண்டி சென்று விட்டது என்றும் ஒரு தகவல் வலம் வந்தது. எது எப்படியோ, தோனி இந்திய அணியில் இடம் பெறவில்லை.

பிசிசிஐ ஒப்பந்தம் இல்லை
இதன் இடையே ஜனவரி மாதம் தோனியின் பிசிசிஐ ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. அதே நாளில் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் கிரிக்கெட் பயிற்சியை துவங்கினார். அதன் மூலம், அவர் மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்புகிறார் என்ற செய்தி உலகுக்கு புரிந்தது.

ரவி சாஸ்திரி என்ன சொன்னார்?
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், தோனி ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று விடுவார். ஐபிஎல் தொடரில் ஆடி அவர் தன்னை நிரூபித்தால், உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய டி20 அணியில் அவர் இடம் பெற வாய்ப்புள்ளது என்றார்.

ஐபிஎல் பயிற்சி
அதற்கு தான் தோனி முயற்சி செய்கிறார் என்பது போலவே 2020 ஐபிஎல் தொடருக்கு முழு வீச்சில் தயார் ஆனார். மார்ச் 3 முதல் அதிரடி பயற்சியை துவக்கினார். ஆனால், 2020 ஐபிஎல்-லுக்கும், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்துக்கும் எமனாக வந்தது கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் பாதிப்பு
சீனாவில் துவங்கி உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்தது. அதனால், ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னும் ஐபிஎல் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கசிந்த தகவல்
அதனால், தோனி தன்னை நிரூபிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். அவர் இந்திய அணிக்கு திரும்ப மாட்டார் என கூறப்பட்டு வரும் இந்த நேரத்தில் தோனி ஏற்கனவே ஓய்வு முடிவை எடுத்து விட்டார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

முடிவை கூறி விட்டார்
இது குறித்து ஸ்போர்ட்ஸ்கீடா இணையதளத்துக்கு தோனியின் நெருக்கமான ஒருவர் தகவல் கூறி உள்ளார். "அவர் பிசிசிஐ அதிகாரிகளிடம் ஓய்வு குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், நெருக்கமான நண்பர்களிடம் அவர் கூறி விட்டார். நேரம் வரும் போது அவர் அனைவரிடமும் கூறுவார்" என்றார்.

ஐபிஎல்-க்காக காத்திருப்பு
மேலும், ஐபிஎல் தொடருக்காகவே தோனி ஓய்வு முடிவை அறிவிக்காமல் காத்திருந்ததாகவும், ஓய்வுக்கு முன் தன் பார்மை பரிசோதிக்கவே அவர் காத்திருந்தார் எனவும் அந்த நபர் கூறி உள்ளார். இந்த தகவலின் மூலம் தோனியின் ஓய்வு உறுதி ஆகி உள்ளது.

அதிர்ச்சி செய்தி
2020 ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், அந்த அறிவிப்பு வந்த பின் தோனி தன் ஓய்வு முடிவை ஏற்கனவே எடுத்து விட்டார் என்றால், அதை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தோனி ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தி தான்.


Click it and Unblock the Notifications











