
ஸ்ரீகாந்த் விளாசல்
நாசிர் ஹுசைன் தோனியை அணியில் சேர்த்துக் கொள்ளலாம், அவர் ஓய்வு பெற்றுவிட்டால் அவர் போன்ற ஒரு வீரரை மீண்டும் பெற முடியாது என தோனிக்கு சாதகமாக கூறினார். ஆனால், ஸ்ரீகாந்த், தோனியை அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்பதை வலியுறுத்தி விளாசினார்.

தோனி நிலை
தோனி கடந்த 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தான் கடைசியாக இந்திய அணிக்காக ஆடி இருந்தார். அதன் பின் எந்த சர்வதேச அல்லது உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

2020 ஐபிஎல் நடக்குமா?
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்று தன் பார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபித்து இந்திய அணிக்கு தேர்வாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார் தோனி. இதனிடையே, ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

கேள்விக்குறி
அதனால், தோனி நிலை கேள்விக் குறியாகி உள்ளது. பலரும் தோனி தன்னை நிரூபிக்காவிட்டால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவரின் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடும் கனவு நிறைவேறாது என கூறி வருகின்றனர்.

தேர்வுக் குழு தலைவராக இருந்தால்..
இது குறித்த விவாதத்தில் பேசிய தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த் பேசுகையில், "நான் தேர்வுக் குழு தலைவராக இருந்தால் என்ன செய்வேன் என்பதை பற்றித் தான் நான் பேசுகிறேன். ஐபிஎல் நடக்காவிட்டால், தோனியின் வாய்ப்பு மிக, மிக குறைவு." என்றார்.

இரு வீரர்கள் உள்ளனர்
"நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், என் கருத்து இதுதான். கேஎல் ராகுல் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக இருப்பார். ரிஷப் பண்ட் மீது சிறிது சந்தேகம் உள்ளது.. ஆனாலும் அவர் அதிக திறமை கொண்டவர் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் ஸ்ரீகாந்த்.

ஐபிஎல் நடக்காவிட்டால்..
"ஆனால், ஐபிஎல் தொடர் நடக்காவிட்டால் தோனி அணிக்கு திரும்புவது மிகக் கடினம். அவர் அணிக்கு திரும்பி டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடுவதும் கடினம்" எனவும் கூறினார் ஸ்ரீகாந்த். தோனி தன்னை நிரூபிக்கும் ஒரே களமாக ஐபிஎல் தொடர் மட்டுமே உள்ளது என்பதையே ஸ்ரீகாந்த் சுட்டிக் காட்டுகிறார்.

அணி தான் முதலில்..
தோனி அணிக்கு திரும்புவது குறித்து பேசுகையில், "இதை பற்றி உண்மையாக இருக்க வேண்டும். அவர் உடற்தகுதியோடு இருக்கிறார், அவர் ஒரு ஜாம்பவான். அவர் புத்திசாலி. நானே தோனியின் ரசிகன் தான். ஆனால், இங்கே கேள்வி உலகக்கோப்பை அணி குறித்து உள்ளது. எனவே, இங்கே இந்திய அணியை முதலில் வைக்க வேண்டும். தனிநபர்களை அல்ல." என ஒரு தேர்வுக் குழு தலைவராக தோனிக்கு இடம் கொடுக்க முடியாது என கூறினார் ஸ்ரீகாந்த்.

ஹுசைன் ஆதரவு
அதே விவாதத்தில் பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசிர் ஹுசைன், தோனி ஒருமுறை போய்விட்டால் (ஓய்வு பெற்று விட்டால்), அவரை திரும்ப பெற முடியாது. ஒரு தலைமுறைக்கு மட்டுமே உதிக்கும் அவர் போன்ற வீரர்களை முன்னதாக ஓய்வுக்குள் தள்ளக் கூடாது என்றார்.

தடுமாற்றம் உள்ளது
அதே சமயம் தோனி கடந்த உலகக்கோப்பை தொடரில் சில சேஸிங் போட்டிகளில் பேட்டிங்கில் திணறியதையும் சுட்டிக் காட்டினார். தோனி இப்போதும் சிறந்த திறமையாளர் தான். ஆனாலும், அவரிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார் ஹுசைன்.


Click it and Unblock the Notifications