
சிக்கலில் கும்ப்ளே
கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி செய்த தவறுகளால் கொல்கத்தா அணி வென்றது. குறிப்பாக, மேக்ஸ்வெல்லுக்கு முன் அனுபவம் இல்லாத வீரர் ஒருவரை பேட்டிங் செய்ய அனுப்பியது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதனால், கேஎல் ராகுல், அனில் கும்ப்ளே இருவரும் சிக்கலில் உள்ளனர்.

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி
2020 ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

கொல்கத்தா ஸ்கோர்
கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்தாலும், ஷுப்மன் கில், கேப்டன் தினேஷ் கார்த்திக் அரைசதம் அந்த அணியை மீட்டது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 57, தினேஷ் கார்த்திக் 58 ரன்கள் குவித்தனர்.

பஞ்சாப் அதிரடி ஆட்டம்
அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட பஞ்சாப் அணிக்கு ராகுல் - மயங்க் அகர்வால் அபார துவக்கம் அளித்தனர். அகர்வால் அதிரடி ஆட்டம் ஆடி 39 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். ராகுல் விக்கெட்டை தற்காத்து நீண்ட நேரம் களத்தில் நின்று நிலையாக ஆடினார்.

கடைசி மூன்று ஓவர்கள்
மயங்க் அகர்வால் சென்ற பின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்து வந்தார். அவர் 18வது ஓவரில் சுனில் நரைன் பந்துவீச்சை தவறாக கணித்து பவுல்டு அவுட் ஆனார். அது தான் பஞ்சாப் செய்த முதல் தவறு. இந்த கடைசி மூன்று ஓவர்கள் பஞ்சாப் அணியை தோல்வி அடைய வைத்தது.

பிரப்சிம்ரன் சிங்
நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்த போது 16 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வருவார் என எதிர்பார்த்த நிலையில், அனுபவம் இல்லாத உள்ளூர் வீரர் பிரப்சிம்ரன் சிங் பேட்டிங் செய்ய வந்தார்.

வேடிக்கை பார்த்த ராகுல்
அவர் முதல் மூன்று பந்துகளில் டாட் பால் ஆடி, 18வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் ஓடி, 19வது ஓவரை எதிர்கொண்டார். அவர் 19வது ஓவரை சந்திக்க ஸ்ட்ரைக் எடுக்க முயற்சித்த போது கேஎல் ராகுல் அதற்கு எந்த எதிர்ப்பும் கூறாமல், அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

பிரப்சிம்ரன் சிங் அவுட்
பிரப்சிம்ரன் சிங் 19வது ஓவரில் சிங்கிள் ரன்களாக ஓடி, பின் 4வது பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசியில் கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். அப்போதே பஞ்சாப் அணி தோல்விக்கு அருகே சென்றது.

தோல்வி
கடைசி ஓவரை மேக்ஸ்வெல் சந்தித்தார். சுனில் நரைன் வீசிய அந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 12 ரன்கள் மட்டுமே கிடைக்க கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற வேண்டிய போட்டியில் பூரன் விக்கெட் மற்றும் மேக்ஸ்வெல்லுக்கு முன் பிரப்சிம்ரன் சிங் இறங்கியதால் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

அனுப்பியது யார்?
மேக்ஸ்வெல் போன்ற அனுபவ அதிரடி வீரர் இருக்கும் போது, பிரப்சிம்ரன் சிங்கை கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய அனுப்பியது யார்? பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவா? அல்லது கேப்டன் கேஎல் ராகுலா? என்ற கேள்வி எழுந்தது. பஞ்சாப் அணி ஏழு போட்டிகளில் ஆறு தோல்விகளை பெற்று மோசமான நிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications