வரலாற்று சாதனை.. ஐபிஎல்-இல் இந்த சாதனையை செய்யும் 2வது விக்கெட் கீப்பர்.. தெறிக்கவிட்ட தோனி!
துபாய் : தோனி ஐபிஎல் தொடரில் 100 கேட்ச் என்ற மைல்கல்லை எட்டி சாதனை புரிந்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை செய்யும் இரண்டாவது விக்கெட் கீப்பர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவர் கேஎல் ராகுல் கொடுத்த கேட்ச்சை டைவ் அடித்து பிடித்த போது இந்த சாதனையை செய்தார்.

சிஎஸ்கே அபாரம்
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று மோசமான நிலையில் இருந்தது. இந்த நிலையில், ஐந்தாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை புரட்டிப் போட்டு வெற்றி பெற்றது.

தோனி பிடித்த கேட்ச்
இந்தப் போட்டியில் தோனி பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை தாவிப் பிடித்தார். ராகுல் 63 ரன்கள் அடித்து கடைசி ஓவர்களில் அடித்து ஆட தயாராக இருந்த போது தோனி அவரது விக்கெட்டை அந்த கேட்ச் மூலம் வீழ்த்தினார்.

100 கேட்ச்
அது தோனியின் 100வது கேட்ச் ஆகும். ஐபிஎல் வரலாற்றில் இந்த மைல்கள் சாதனையை செய்யும் இரண்டாவது விக்கெட் கீப்பர் தோனி. இதுவரை தோனி 139 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். அதில் 100 கேட்ச்கள், 39 ஸ்டம்பிங்குகள் அடங்கும்.

முதல் இடத்தில் யார்?
ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். அவர் 2017இல் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடும் போது இந்த சாதனையை செய்து இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்தே தோனி அந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

அதிக விக்கெட் வீழ்ச்சி
அதிக கேட்ச்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதல் இடத்தில் இருந்தாலும், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சி செய்தவர்கள் பட்டியலில் தோனி தான் முதல் இடத்தில் இருக்கிறார். தோனி 139 விக்கெட் வீழ்ச்சியும், தினேஷ் கார்த்திக் 133 விக்கெட் வீழ்ச்சியும் செய்துள்ளனர்.

அதிக போட்டிகள்
மேலும், தோனி ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த சாதனையை அவர் கடந்த போட்டியில் செய்திருந்தார். சுரேஷ் ரெய்னாவை முந்தி அவர் இந்த சாதனையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணியை துவக்க வீரர்கள் வாட்சன், பாப் டுபிளெசிஸ் அரைசதம் கடந்து தங்கள் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி பெற வைத்தனர்.


Click it and Unblock the Notifications