
அத்தனை எளிதல்ல
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் நீடிக்கும் நிலையில் அதனிடையே கிரிக்கெட் போட்டிகள் நடப்பது அத்தனை எளிதல்ல என உணர்த்தி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அந்த அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயார் ஆகி வந்தது.

10 வீரர்களுக்கு பாதிப்பு
பாகிஸ்தான் அணி இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து கிளம்ப இருந்தது. அதற்கு முன் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 வீரர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது. இதன் இடையே இங்கிலாந்து செல்வதில் தாங்கள் உறுதி ஆக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கூறி உள்ளது.

சந்தேகம்
ஆனால், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்வதும், அங்கே முழுமையாக டெஸ்ட் தொடரில் பங்கேற்பதும் சந்தேகம் தான் என கூறப்படுகிறது. தற்போது அந்த 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றால் மீண்டும் அதே போல பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

மாற்று வீரர்
ஒரு வீரர் தொடரின் பாதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரரை களமிறக்க திட்டம் தீட்டி வருகின்றன அணிகள். டெஸ்ட் போட்டியில், போட்டிக்கு நடுவே கூட இதுபோல வீரர்களை மாற்றிக் கொள்ள ஐசிசி தற்காலிக அனுமதி அளித்துள்ளது.

ஐபிஎல் சுலபம் அல்ல
இருதரப்பு கிரிக்கெட் தொடரிலேயே இத்தனை சிக்கல்கள் என்றால், ஐபிஎல் போன்ற பல நாட்டு வீரர்கள் பங்கேற்கும் பெரிய தொடரை நடத்துவது அத்தனை சுலபம் அல்ல. வீரர்கள் களத்தில் சமூக இடைவெளி கடைபிடிப்பதும் கடினம்.

டென்னிஸ் உலகமும் கலக்கம்
ஒன்றாக பயிற்சி செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியது போலவே, டென்னிஸ் தொடரில் ஆடிய முன்னணி வீரர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், டென்னிஸ் உலகமும் கலக்கத்தில் தான் உள்ளது.

ரத்து செய்ய நேரிடும்
கொரோனா வைரஸுக்கு மத்தியில் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என கிரிக்கெட் போட்டிகளை நடத்தினால் மட்டுமே நீண்ட தொடர்களை நடத்த முடியும். அப்படி இல்லை என்றால் ஒவ்வொரு கிரிக்கெட் தொடரையும் பாதியிலேயே ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.

வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 6க்கும் மேல் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் ஆட ஒப்புக் கொண்டாலும், இவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்
ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் மற்ற அனைவருக்கும் அது பரவி விடும். அப்போது மாற்று வீரர்களை பயன்படுத்துவதும் சரியான தீர்வாக இருக்காது. இந்த சிக்கல்கள் எதுவும் இன்றி இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் நடந்தால் மட்டுமே ஐபிஎல் பற்றி சிந்திக்க முடியும் என்பது தான் நிதர்சனம்.


Click it and Unblock the Notifications