
துபாயில் முகாமிட்டுள்ள அணிகள்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டுள்ளன. தற்போது குவாரன்டைனில் உள்ள அணி வீரர்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சி அளித்தால் அவர்களை சரியாக பயன்படுத்த முடியும் என்பது குறித்து அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து திட்டமிட்டு வருகின்றனர்.

அணி நிர்வாகம் திட்டம்
இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு நாளை முதல் பிரத்யேக பயிற்சி அளிக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் மைக் ஹெசன் மற்றும் தலைமை பயிற்சியாளர் சைமன் காட்டிச் ஆகியோர் திட்டமிட்டு வருகின்றனர். வீரர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்றாற்போல தனிப்பட்ட வகைகளில் பயிற்சியளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தனிப்பட்ட முறையில் பயிற்சிகள்
பல்வேறு சூழல்களில் கடந்த 5 மாதங்களாக வீரர்கள் இருந்தநிலையில், அவர்களுக்கு ஒரேமாதிரியான பிட்னஸ் மற்றும் பயிற்சிகளை அளிக்க முடியாது என்று மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். அதேபோல தனித்தனியாக வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும் போட்டியை எதிர்கொள்ள உதவாது என்று கூறியுள்ள அவர், வீரர்களை மனதளவிலும் உடலளவிலும் மேலும் உணர்வளவிலும் தயார் படுத்துவதன் மூலம் அவர்களை போட்டிகளில் சிறப்பாக பங்கேற்க செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தலைமை கோச் திட்டம்
இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கிடையிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது மிகவும் சிறப்பானது என்று அணியின் தலைமை கோச் சைமன் காட்டிச் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 3 வாரங்களுக்காவது அணியின் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதன்மூலம் அவர்களை போட்டிகளுக்கு தயார் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர பயிற்சியளிக்க திட்டம்
அணி வீரர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை நடத்த ஆர்சிபி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வீரர்களை மனதளவிலும் உடலளவிலும் யூஏஇயின் வெப்பத்திற்கு ஏற்றாற்போல பழக்கப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. வீரர்களுக்கு தீவிரமாக பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications