
ராஜஸ்தான் - ஹைதராபாத் போட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஆன லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆடியது.

ஹைதராபாத் ஸ்கோர்
ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் பேர்ஸ்டோ 16 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். வார்னர் 48, மனிஷ் பாண்டே 54 ரன்கள் குவித்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க் அதிரடி ஆட்டம் ஆடி 35 ரன்கள் குவித்தனர்.

ராஜஸ்தான் பந்துவீச்சு
ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி இரு ஓவர்களில் சொதப்பினாலும், கார்த்திக் தியாகி தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக் கோப்பாக பந்து வீசி இருந்தனர்.

ராஜஸ்தான் பேட்டிங்
அடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங் ஆடியது. பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் துவக்கம் அளித்தனர். ஸ்டோக்ஸ் 5, பட்லர் 16, ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். அணியின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் 26 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழந்தனர்.

5 விக்கெட் காலி
அடுத்து சஞ்சு சாம்சன் நிதான ஆட்டம் ஆடி 26 ரன்கள் எடுத்தார். ராபின் உத்தப்பா 18 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித் கானிடம் ஆட்டமிழந்தார். 12 ஓவர்களில் 78 ரன்கள் குவித்து 5 விக்கெட்களை இழந்தது ராஜஸ்தான் அணி.

ரியான் பராக் - ராகுல் திவேதியா
அடுத்து உள்ளூர் வீரர்கள் ரியான் பராக் - ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர். அப்போது 8 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 15வது ஓவர் வரை இருவரும் விக்கெட்டை தற்காத்து நிதானமாக ஆடினர்.

திட்டமிட்ட ஆட்டம்
அதன் பின் கடைசி 5 ஓவர்களை திட்டமிட்டு ஆடினர். இனி ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்க வேண்டும் என முடிவு செய்து ஹைதராபாத் பந்துவீச்சை காலி செய்தனர். 17வது ஓவரில் 18 ரன், 18வது ஓவரில் 14 ரன், 19வது ஓவரில் 14 ரன் எடுத்தனர். .

கடைசி ஓவர்
கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அந்த ஓவரை கலீல் அஹ்மது வீசினார். ரியான் பராக் - திவேதியா முதல் 4 பந்துகளில் சிங்கிள் ரன்கள் ஓடியே 6 ரன்கள் சேர்த்தனர். கடைசி 2 பந்தில் 2 ரன் தேவை எனும் நிலையில் பராக் ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்.

ராஜஸ்தான் வெற்றி
ரியான் பராக் 42, திவேதியா 45 ரன்கள் எடுத்திருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முக்கிய விக்கெட்களை வீழ்த்தினாலும், உள்ளூர் வீரர்களிடம் ஏமாந்து போனது ஹைதராபாத் அணி.


Click it and Unblock the Notifications