மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக இதுவரை இல்லாத வகையில் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ.
14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த முறை அயல்நாட்டில் நடத்தப்பட்ட நிலையில் இந்த முறை மிகுந்த பாதுகாப்புடன் உள்நாட்டிலே நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல்-ல் வீரர்கள், உரிமையாளர்கள், குடும்பத்தினர் பின்பற்ற புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு வீரரும் அணியின் பயோ பபுளில் இருப்பது போன்று அவர்களின் குடும்பத்தினரும் பபுளில் கட்டாயம் இருக்க வேண்டும். அதே போல அணியின் உரிமையாளர்களும் மிக அவசரக்காரணங்களுக்காக மட்டுமே பபுளில் இருந்து வெளியே செல்ல வேண்டும் . அதுவும் பிசிசிஐயிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியே செல்ல வேண்டும்.
* ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் தங்குவதற்காக முழு ஹோட்டலையும் புக் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு தனி கட்டத்தை புக் செய்து பின்னர் அங்கு யாரும் நுழையாத படி சீல் செய்ய வேண்டும்.
* அணி வீரர்களும், நிர்வாகிகளும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க ஒவ்வொரு அணிக்கும் 4 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் வீரர்கள் அணியின் பபுளில் இணைவதற்கு முன்பாக 7 நாட்களுக்கு சொந்த செலவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களின் செலவை அணி நிர்வாகம் ஏற்காது.
* போட்டியின் போது பார்வையாளர்கள் இருக்கையில் அல்லது மைதானத்திற்கு வெளியே பந்து சென்றால் அந்த பந்திற்கு பதிலாக உடனடியாக வேறு பந்து மாற்றப்படும். மாற்றப்பட்ட பந்து சானிடைசர் தெளிக்கப்பட்ட வேறு ஆட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.
* வீரர்களை தேவையின்றி தனிமைப்படுத்துவதை தவிர்க்க, இங்கிலாந்து - இந்தியா தொடரில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் மட்டும் தேசிய அணியின் பபுளில் இருந்து ஐபிஎல் அணியின் பபுளுக்கு நேரடியாக மாறிக்கொள்ளலாம். அவர்களுக்கு எந்தவித தனிமைப்படுத்துதலும் தேவை இல்லை.
* அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னைக்கு வருகை தரும் வீரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இ- பாஸ் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு வீரருக்கும், அணியின் பபுளில் இணைவதற்கு முன்னால் 3 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். பரிசோதனையின் முடிவில் நெகட்டீவ் என வந்தால் மட்டுமே அணியின் பபுளில் இணைக்கப்படுவார்கள்
* ஹோட்டல்களில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட வேண்டும். ஒரே அறையில் வீரர்கள் இருந்தால் சுலபமாக கொரோனா பரவ வாய்ப்பு ஏற்படலாம் என இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது.
* பிசிசிஐயில் இருந்து எந்த ஒரு அதிகாரிகளும், நிர்வாகிகளும் அணிகளின் பபுளுக்குள் நுழையக்கூடாது. யாரையும் சந்திக்க செல்லக்கூடாது.