இந்த முறை மும்பை இல்லை!!.. ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்?.. 3 அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு!!
மும்பை: இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு 3 அணிகளுக்கு தான் அதிக வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
15வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த முறை கூடுதலாக 2 அணிகள் வந்துள்ளதால் சுவாரஸ்யம் கூடியுள்ளது.
மெகா ஏலம் மூலம் ஒவ்வொரு அணியும், அட்டகாசமான படைபலத்துடன் களமிறங்குவதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த ரேஸில் 3 அணிகள் தான் முன்னிலை வகிக்கின்றன.

சிஎஸ்கே அணி
கடந்தாண்டு சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணம் நீண்ட பேட்டிங் ஆர்டர் மற்றும் பவுலிங் படை. அதனை அப்படியே தக்கவைத்துள்ளது சிஎஸ்கே அணி. ஓப்பனிங்கில் டெவோன் கான்வே - ருதுராஜ் அதிரடி காட்ட, மிடில் ஆர்டரில் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, சீரான வேகத்தில் ரன்களை உயர்த்துவார்கள். லோயர் மிடில் ஆர்டரில் ஜடேஜா, பிராவோ, ஷிவம் தூபே போன்றோர் சிக்ஸர் மழை காட்டுவார்கள்.

பந்துவீச்சில் சிறப்பு
பவுலிங்கை பொறுத்தவரையில் தீபக் சஹார் மற்றும் பிராவோ ஜோடி டெத் ஓவர்களை சமாளித்துவிடும். இவர்கள் தவிர்த்து, கிறிஸ் ஜோர்டன் அல்லது ஆடம் மில்னே யாரேனும் ஒருவர் அணியில் உதவுவார்கள். ஸ்பின்னர்களில் மிட்செல் சாண்ட்னர், ஜடேஜா உள்ளனர். மொத்தமாக 8 ஆல்ரவுண்டர்கள் வந்துவிடுவார்கள்.

லக்னோ அணி
ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்திருந்தாலும், அணித்தேர்வுகள் படு பலமாக உள்ளது. கம்பீரின் ஆலோசனைப்படி வீரர்கள் தேர்வு இருந்தன. அதன்படி ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல், டிக்காக் ரன் சேர்க்க, மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே , மார்கஸ் ஸ்டோயினிஸ், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா என பேட்டிங் ஆர்டர் உள்ளது. இவர்களை தாண்டினால் கூட ஜேசன் ஹோல்டர் 7வது வீரராக உள்ளார். இதனால் சுலபமாக கடின இலக்கை அடிக்கலாம்.

பவுலிங் படை
பவுலிங்கை பொறுத்தவரையில் கடந்த சீசனில் கலக்கிய ஆவேஷ் கான், ஜேசன் ஹோல்டருடன் இணையலாம். இவர்களுடன் சேர்த்து ரவி பிஷ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ் பக்க பலமாக இருப்பார்கள். மார்க் வுட் திடீரென அணியில் இருந்து விலகியுள்ளதால், மாற்று வீரரையும் சிறப்பாக கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி
இந்த பட்டியலில் மூன்றாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது. ஓப்பனிங்கில் தேவ்தத் பட்டிக்கல், யஷாஸ்வி ஜெயிஸ்வால் என இளம் சிங்கங்கள் உள்ளன. மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர் பக்கலமாக உள்ளனர். அதையும் தாண்டினால் சிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜிம்மி நீஷம் என அடுத்தடுத்து அதிரடி காத்துள்ளது. இதில் நீஷம் மற்றும் பராக் ஆகியோர் பவுலர்களாகவும் செயல்படுவார்கள்.
Recommended Video

பவுலிங் என்ன
பந்துவீச்சை பொறுத்தவரையில் யுவேந்திர சஹால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி களம் காணுகிறது. வேகப்பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி என அட்டகாசமான பவுலிங் படையை தயார் செய்து வைத்துள்ளனர். இதனால் இந்த அணியும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications