“அட இது நல்லா இருக்கே!!” அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ஐடியா தான்?
சென்னை: ஐபிஎல் தொடரில் சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக புதிதாக இணைக்கப்பட்ட அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களின் முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டன.
இதில் லக்னோ அணி ஏற்கனவே தங்களது "அணி பெயர்", லோகோ, நிறம் என பலவற்றை வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் அகமதாபாத் அணியும் அந்த பணியை தொடங்கியுள்ளது.

அணியின் விவரம்
சிவிசி கேப்பிடல்ஸ் குழுமம் ரூ.5,625 கோடிக்கு அகமதாபாத் அணியை ஏலம் எடுத்தது. இதன் பின்னர் அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் மற்றும் இந்திய வீரர் சுப்மன் கில் ஆகியோரை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணிக்கு முன்னாள் வீரர் அஷிஸ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ன பெயர்
இந்நிலையில் அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "அகமதாபாத் டைடான்ஸ்" என்பது தான் அந்த பெயராகும். அதாவது மிகவும் பலமான சிறந்த சிந்தனை கொண்டவர்கள் என்பதை தான் "டைட்டான்ஸ்" என்றழைப்பார்கள். அதனை மையமாக வைத்து அணியை உருவாக்கியுள்ளனர்.

பாண்ட்யாவுக்கு பங்கு
இந்த அணியின் பெயரை முடிவு செய்வதில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக இளைஞர்களை கவர்வதற்காக இந்த டைட்டான் என்ற வார்த்தையை தேடிப்பிடித்துள்ளனர். இதனை தற்போது பாண்ட்யாவின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அணியின் லோகோ
ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. எனவே அதற்குள்ளாக அகமதாபாத் அணியின் லோகோவையும் வெளியிட பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதனால் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அணியின் லோகோ வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications