டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி இல்லை??.. தேர்வுக்குழு தலைவர் சொன்ன பதில்.. பரபரப்பில் ரசிகர்கள்!
மும்பை: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பிடிப்பாரா என்பது குறித்து தேர்வுக்குழு அதிகாரி தெரிவித்த பதில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்துதான் இந்திய அணி அமையும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

கோலியின் ஃபார்ம்
அந்த வகையில் தற்போது விராட் கோலியின் மீது தான் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி மொத்தமாகவே 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் தொடர்ச்சியாக 2 டக் அவுட்களும் அடங்கும். விராட் கோலி அடித்த ரன்கள், 41* vs PBKS, 12 vs KKR, 5 vs RR, 48 vs MI, 1 vs CSK, 12 vs DC, 0 vs LSG, 0 vs SRH, 9 vs RR ஆகும்.

ரசிகர்கள் கவலை
மிடில் ஆர்டரில் தான் தடுமாறுகிறார், அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கும் வகையில், ராஜஸ்தானுக்கு எதிராக ஓப்பனிங் களமிறக்கப்பட்டார். ஆனால் அதிலும் அவர் 9 ரன்களுக்கு நடையை கட்டினார். விராட் கோலியின் ஃபார்மில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.

இந்திய அணியில் இடமில்லை
இந்நிலையில் இவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பது சிக்கலாக மாறியுள்ளது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், விராட் கோலி சிறந்த வீரர் தான். எனினும், அவரின் தற்போதைய ஃபார்ம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. டி20 உலகக்கோப்பை அணியில் அவரை சேர்ப்பது என்பது தேர்வுக்குழுவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப் போகிறது என தெரிவித்தார்.

தேர்வுக்குழுவின் பதில்
பிரபல செய்தி ஊடகம் ஒன்று, தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மாவை தொடர்பு கொண்டுள்ளனர். அவரிடம் கோலி குறித்த கேள்வி எழுப்பியவுடன், அது குறித்து எதையும் பேசுவதற்கு விருப்பம் இல்லை, என உடனடியாக தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விராட் கோலி விவகாரத்தில் பிசிசிஐ-ல் குழப்பம் இருப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications