இரண்டே நிபந்தனை.. இங்கி, வாரியத்தை அலறவிட்ட பென் ஸ்டோக்ஸ்.. இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு புது கேப்டன்
மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு புகழ்பெற்ற இங்கிலாந்து அணி, சமீப காலமாக மிக மோசமான நிலையில் தவித்து வருகிறது.
ஜோ ரூட் கேப்டன்சியில் ஆஷஸ் தொடர், இந்தியாவுடனான தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என அடுத்தடுத்து தோல்விகள் ஏற்பட்டுள்ளது.

இங்கி, டெஸ்ட் அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (9) உள்ளது. இதற்கெல்லாம் பொறுப்பேற்று பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர்கள் பதவி விலகினர். எனினும் கேப்டன் பதவியில் இருந்து விலக ஜோ ரூட் ஒப்புக்கொள்ளவில்லை. இதன் பின்னர் நடந்த பெரும் சர்ச்சைகளுக்கு பிறகு பதவி விலகினார்.

புதிய கேப்டன் நியமனம்
இந்நிலையில் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல்-ல் காயம் ஏற்பட்ட பென் ஸ்டோக்ஸ் பல மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். ஆஷஸ் தொடரில் தான் அணிக்கு திரும்பினார். எனினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 10 இன்னிங்ஸ்களில் 236 ரன்களும், 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இப்படிப்பட்ட சூழலில் தான் அவர் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.

ஸ்டோக்ஸின் நிபந்தனை
இதில் சுவாரஸ்யமே ஸ்டோக்ஸின் நிபந்தனைகள் தான். அதாவது அவர் கேப்டனாக பதவியேற்க வேண்டுமென்றால், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இரு பவுலர்களையும் மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவர்கள் இருவரின் டெஸ்ட் பயணத்தையே இங்கிலாந்து வாரியம் முடித்துவிட்ட நிலையில், அவர்களை கேட்டு பென் ஸ்டோக்ஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

காரணம் என்ன
ஜேம்ஸ் ஆண்டர்சன் ( 640 விக்கெட்டுகள் ) மற்றும் பிராட் ( 537 விக்கெட்டுகள் ) ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் நட்சத்திர பவுலர்களாக இருந்து வந்தனர். ஆனால் ஆஷஸ் தொடரில் சொதப்பி அவமானத்திற்கு காரணமாகிவிட்டனர். எனவே அவர்களை அணியில் இருந்து நீக்கியது இங்கிலாந்து வாரியம். இந்த சூழலில் அவர்கள் அணிக்கு திரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications