
பவுலர்களுக்கு நெருக்கடி
தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே, ருத்துராஜ் ஜோடி வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். கான்வே 29 பந்துகள் அடித்திருக்கும் போதே அரைசதம் அடித்தார். அப்போதே 4 சிக்சர்களை கான்வே விளாசினார். குல்தீப் யாதவின் 8 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 30 ரன்களை விளாசினார். இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா ஓவரில் ருத்துராஜ் இறங்கி வந்து சிக்சர் அடித்தார்.

சிஎஸ்கே 208 ரன்கள்
ருத்துராஜ் 41 ரன்களில் ஆட்டமிழக்க , முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன்களை சேர்த்தது. நடப்பு சீசனில் 2வது முறையாக இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்துள்ளது. கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் அடித்த நிலையில் கலில் அகமது பந்துவீச்சில் ரிஷப் பண்டிடம் பிடிப்பட்டார். சிவம் துபேவும் 19 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். கேப்டன் தோனியும் எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் விளாசினார். 8 பந்தில் அவர் 21 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்களை எடுத்தது..

டெல்லி பேட்டிங் சொதப்பல்
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்டுகளை வீழ்ந்தது. கேஎஸ் பாரத் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய வார்னர் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. 25 ரன்களில் மிட்செல் மார்சும், 21 ரன்களில் ரிஷப் பண்டும் மொயின் அலியின் பந்துவீச்சில் சிறிய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இது திருப்புமுனையை ஏற்படுத்தியது.

117 ரன்களில் சுருண்டது
இதனால் டெல்லி அணியின் தோல்வி அப்போதே உறுதியானது. எனினும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்துவீச பொவேல், அக்சர் பட்டேல் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, டெல்லி அணி 117 ரன்களில் சுருண்டது. மொயின் அலி 13 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டம் முடிந்ததும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி அணி வீரர்கள் கைக்கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











