கேதர் ஜாதவின் ஸ்டைலை பின்பற்றிய டேவிட் வார்னர்.. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.. ரசிகர்கள் அதிர்ச்சி
மும்பை: ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், மிகவும் மோசமாக சொதப்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
15வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
DY பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

எதிர்பார்த்த ரசிகர்கள்
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில், ஓப்பனிங் ஆட்டத்தை காண்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் காத்துக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் அறிமுகமானது தான். அதிரடி ஃபார்மில் இருக்கும் வார்னர் இதுவரை ஐபிஎல்-ல் 49.59 ரன்கள் என்ற சராசரியுடன் உள்ளார். இவர் இதனால் இன்றும் அதிரடி எதிர்பார்க்கப்பட்டது.

வார்னர் திணறல்
ரசிகர்கள் நினைத்தபடி ஒவ்வொரு பந்தும் சிக்ஸருக்கு பறந்தது. ஆனால் அதனை டேவிட் வார்னர் அடிக்கவில்லை, மாறாக பிரித்வி ஷா அடித்து வந்தார். ஒருபுறம் பிரித்வி 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என பொளந்துக்கட்ட, மற்றொரு புறம் டேவிட் வார்னர் பந்தை எதிர்கொள்வதற்கே திணறி வந்தார்.

கேதர் ஜாதவ் ஸ்டைல்
பேட்டிங் களத்தில் 12 பந்துகளை சந்தித்த வார்னர், மட்டைப்போட்டுக்கொண்டே 4 ரன்களை மட்டும் தான் அடித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 33 மட்டுமே இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், வார்னர் ஆடுகிறாரா, இல்லை கேதர் ஜாதவ் விளையாடுகிறாரா என கிண்டலடித்து வந்தனர். இறுதியில் அந்த 4 ரன்களுக்கே அவுட்டாகி வெளியேறினார்.

தவறிய முக்கிய வாய்ப்பு
தன்னை அவமதித்த ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அரைசதமாவது இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல தான் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் இன்று கடைசி நேரத்தில் அனைத்தையும் சொதப்பிவிட்டார்.


Click it and Unblock the Notifications