அஸ்வினின் அரைசதம் வீண்.. ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்.. ராஜஸ்தானை ஓடவிட்ட டெல்லி அணி.. அபார வெற்றி!
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்பால் அபார வெற்றி பெற்றது.
58வது லீக் போட்டியாக நடந்த இந்த மோதல் மும்பை DY பாட்டில் மைதனாத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. நம்பிக்கை வீரரான ஜாஸ் பட்லர் 7 ரன்களுக்கு வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 19 ரன்களுக்கு நடையை கட்டினார். முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ராஜஸ்தான் அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தான் காப்பாற்றினார்.

அஸ்வின் முதல் அரைசதம்
முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அவர், தேவ்தத் பட்டிக்கலுடன் சேர்ந்து சீரான வேகத்தில் ரன்களை உயர்தினார். மொத்தமாக 38 பந்துகளை சந்தித்த அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பட்டிக்கல் 48 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை சேர்த்தது.

டெல்லி இன்னிங்ஸ்
161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் ஓப்பனிங் வீரர் ஸ்ரீகர் பிரசாத் டக் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் அதன்பின்னர் வந்த டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஒருபுறம் மிட்செல் மார்ஷ் அதிரடியுடன் 89 ரன்களை விளாச, மறுமுனையில் டேவிட் வார்னர் 52 ரன்களை நிதானமாக சேர்த்தார்.

அபார வெற்றி
இதனால் 18.1 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால், ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications