தினேஷ் கார்த்திக் சூறாவளி ஆட்டம்.. 26 பந்தில் அரைசதம்.. அடித்து நொறுக்கிய ஆர்சிபி
மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் ஹர்சல் பட்டேல் மீண்டும் இணைந்தார்.
இதனையடுத்து தொடக்க வீரராக டுபினஸிஸ் மற்றும் ராவத் களமிறங்கினர். பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய நெருக்கடிய களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது.

ஏமாற்றம்
அனுஜ் ராவத் டக் அவுட்டாகி வெளியேற, கேப்டன் டுபிளஸிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆர்சிபி 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் மேக்ஸ்வெல் இறங்கினார்.

மேக்ஸ்வெல் அதிரடி
குல்தீப் யாதவ் வீசிய ஓரே ஓவரில் 4,2,6,4,6,1 என 23 ரன்களை விளாசினார் மேக்ஸ்வெல். இதனால் ஆர்சிபியின் ஸ்கோர் உயர்ந்தது.சிஎஸ்கேக்கு எதிராக சிறப்பாக ஆடிய பிரபுதேசாய் இந்த ஆட்டத்தில் 6 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 34 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்

தினேஷ் காட்டம்
மேக்ஸ்வெல்லும் சென்றதால் மீண்டும் ஆர்சிபி இன்னிங்ஸ் தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த தினேஷ் கார்த்திக், மரண பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பவுண்டரி, சிக்சர் என அவர் அடிக்க பெட்ரோல் விலை போல் ஆர்சிபி ஸ்கோர் உயர்ந்தது.

ஒரே ஓவரில் 28 ரன்
முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஒரே ஓவரில் 4,4,4,6,6,4 என 28 ரன்களை விளாசினார். இதன் மூலம் 26 பந்தில் அரைசதம் கடந்தார் தினேஷ் கார்த்திக். மேலும் அவர் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்ட 34 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications