குல்தீப்பை பகடையாக்கிய பண்ட்.. மிக மோசமாக சரிந்த கொல்கத்தா.. டெல்லி அணி சாதித்தது எப்படி?
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்-ன் ஸ்மார்ட் கேப்டன்சியால் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளும் மோதிய 41வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

குல்தீப்பின் பவுலிங்
தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபிஞ்ச் 3 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர். கொல்கத்தா மீது குல்தீப் கோபத்தில் இருந்ததை அறிந்த பண்ட், அவரை முன்கூட்டியே கொண்டு வந்தார். அவரின் ஓவரில் இந்திரஜித் (6), சுனில் நரேன் (0), அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் (0) என அவுட்டாகினர்.

சாதாரண இலக்கு
பொறுப்புடன் ஆடி வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 42 ரன்களுக்கு குல்தீப்பிடம் சிக்கினார். கடைசி நேரத்தில் வந்த நிதிஷ் ராணா மட்டும் 57 ரன்களை விளாசியதால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்களை எடுத்தது. வெறும் 3 ஓவர்களை மட்டுமே வீசிய குல்தீப் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

ஓப்பனிங்கே அதிர்ச்சி
சாதாரண இலக்கு என நினைத்து வந்த டெல்லி அணியில் முதல் பந்திலேயே பிரித்வி ஷா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். மற்றொரு ஓப்பனர் டேவிட் வார்னர் தனது கடமைக்கு 42 ரன்கள் அடித்தார். எனினும் மற்ற எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. மிட்செல் மார்ஷ் 13 ரன்கள், கேப்டன் பண்ட் 2 ரன்கள் மட்டும் அடித்து வெளியேறியதால் 113 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து டெல்லி தடுமாறியது.

இறுதி பார்ட்னர்ஷிப்
இந்த போட்டியும் இறுதி ஓவர் வரை பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோவ்மென் போவெல் - அக்ஷர் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். போவெல் 33 ரன்களும், அக்ஷர் பட்டேல் 24 ரன்களும் அடிக்க டெல்லி அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications