
கடைசி நேர சுவாரஸ்யம்
லக்னோ அணியின் வெற்றிக்கு ஆயுஸ் பதோனி காட்டிய கடைசி நேர அதிரடி தான் காரணமாக அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷிவம் தூபே வீசிய 19வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் பறந்தன. ஆயுஸ் பதோனி 9 பந்துகளில்19 ரன்களை விளாசினார். அதில் அவர் அடித்த ஒரு சிக்ஸர் தான் பேசுப்பொருளாகியுள்ளது.
என்னதான் ஆனது
ஷார்ட் லெந்த் டெலிவரியாக வந்த பந்தை ஆயுஸ் பதோனி மண்டியிட்டு ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸருக்கு விளாசினார். டீப் ஸ்கொயர் பக்கம் சென்ற அந்த பந்து, போட்டியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த ரசிகை ஒருவரின் தலையில் பலமாக பட்டது. பந்து எங்கு செல்கிறது என்று ஆர்வத்தில் இருந்த அவருக்கு, அவரின் தலையை நோக்கி தான் வருகிறது என்பதை கவனிக்கவில்லை.

பெண்ணின் நிலை என்ன
இதனையடுத்து அருகே இருந்த மைதான ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் அந்த பெண்ணிடம் என்ன ஆனது, வலி மிக அதிகமாக இருக்கிறதா என்பதை விசாரித்தனர். இறுதியில் அவருக்கு பெரிய காயம் ஒன்றும் இல்லை எனத்தெரியவர மைதானத்தில் அமைதி நிலவியது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவின் அடுத்த தோனி
இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர் ஆயுஸ் பதோனி மட்டும் தனி கவனத்தை ஈர்த்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சரிந்த போதும், மிடில் ஆர்டரில் 41 பந்துகளில் 54 ரன்களை விளாசி உதவினார். நேற்றைய போட்டியில் 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்து ஃபினிஷராக இருந்துள்ளார். இவர் எதிர்காலத்தில் அடுத்த தோனியாக வருவார் என ரசிகர்கள் புகழந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











