மும்பை: சர்வதேச அன்னையர் தினம் மே 8ஆம் தேதி நாளை உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
காலையில் தினமும் கண் விழித்தால்...நான் கை தொழும் தேவதை அம்மா...
அன்பென்றாலே அம்மா...என் தாய் போல் ஆகிடுமா...
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா.. அம்மாவை வணங்காத உயிர் இல்லையே என்ற பாடல்களை நம்மவர்கள் இன்று இரவு முதலே வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைத்து கொண்டாட தொடங்கி விடுவார்கள்.

ஒரு சிலர், அன்னையர் தினம் மட்டும் அன்னையை கொண்டாடுவார்கள். ஆனால் பலர் எப்போதும் அன்னையை கொண்டாடுவார்கள். ஒரு ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருந்தால் நிச்சயம் அது காதலியாகவோ, மனைவியாகவோ இருப்பதற்கு முன் தாய் தான் இருப்பார். அப்படி இருக்க, கிரிக்கெட் வீரர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?
கிரிக்கெட் வீரர்கள் பலர் இன்று நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவர்களுடைய தாயும் முக்கிய காரணமாக இருந்திருப்பார்கள. அந்த தாய்மையை கொண்டாடும் விதமாக லக்னோ அணி இன்று ஒரு சிறப்பான காரியத்தை செய்துள்ளது.
அதன் படி இன்று வீரர்களின் ஜெர்சியில், அவர்களின் பெயருக்கு பதிலாக அவர்களின் தாயின் பெயர் அச்சடிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து லக்னோ வீரர்கள் இன்று விளையாடுகின்றனர். லக்னோ அணியின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.