ப்பா.. என்ன கேட்ச்யா இது..!! விராட் கோலியால் வாயடைத்த ரசிகர்கள்.. ராஜஸ்தான் போட்டியில் திருப்புமுனை
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பிடித்த அசுரத்தனமான கேட்ச் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.
ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வரும் 12வது லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளுமே தங்களது ப்ளேயிங் 11ல் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

ராஜஸ்தான் இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் டேவிட் வில்லி. அவரின் பவுலிங்கில் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு வெளியேறியேறினார். எனினும் 6 -1 என்று இருந்த ராஜஸ்தான் அணியை பட்லர் - தேவ்தத் பட்டிக்கல் ஜோடி மீட்டுக்கொண்டு வந்தது.

பார்ட்னர்ஷிப்
ஒருபுறம் தேவ்தத் பட்டிக்கல் சிக்ஸர் மழை பொழிய, மறுபுறம் ஜாஸ் பட்லர் சீரான வேகத்தில் ரன் அடித்து பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் அணியின் ஸ்கோர் 70 ரன்களை தாண்டி மளமளவென உயர்ந்தது. இருவருமே அரைசதத்தை நோக்கி பயணித்து வந்தனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாத போது தான் கோலி திருப்புமுனை கொடுத்தார்.

நம்பிக்கையே இல்லை
10 ஓவரில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஸ்லோயர் பந்தை தேவ்தத் பட்டிக்கல் சிக்ஸருக்கு விளாச, அந்த பந்து கேட்ச்-க்கு பறந்தது. எனினும் பந்து நீண்ட உயரத்திற்கு சென்றுவிட்டதால் அதை பிடிப்பது சிரமம் என்று தான் கருதினர். ஆனால் ஃபீல்டிங்கில் நின்றவர் விராட் கோலி என்ற அட்டகாசமான ஃபீல்டர் ஆகும்.

கோலியின் கேட்ச்
33 வயதாகும் விராட் கோலி, பந்து வரும் திசையை நோக்கி நிதானமாக நகர்ந்தார். பின்னர் சரியான டைமிங்குடன் பின்னோக்கி டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் பட்டிக்கல் 37 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
முக்கிய பார்ட்னர்ஷிப்பை நீக்கியதால், அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications