ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விவோ நிறுவனம் திடீர் விலகல்.. இனி “டாடா ஐபிஎல்” தான்.. காரணம் என்ன?
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்பான்ஸர் நிறுவனமான விவோ அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் மிக முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள. 2 புதிய அணிகள், மெகா ஏலம் என அடுத்தடுத்து புதிய விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் மெகா ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ட்விஸ்ட்
இப்படி பெரும் எதிர்பார்ப்புகளுடன் வரவுள்ள ஐபிஎல் தொடரில் வருமானம் கொடுக்கும் ஒரு விஷயத்திலேயே முக்கிய மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் தொடரின் மெயின் ஸ்பான்சரான விவோ நிறுவனம் இந்தாண்டு முதல் ஸ்பான்ஸர் செய்வதில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பான்சர் மாற்றம்
அந்த நிறுவனத்திடம் இருந்து பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதனை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டுக்கான புதிய ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவோ ஐபிஎல் என்றழைக்கப்பட்ட தொடர், இனி டாடா ஐபிஎல் என அழைக்கப்படவுள்ளது.

ஒப்பந்த விவரம்
ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம். அதன்படி ஆண்டுக்கு ரூ.440 கோடி என மொத்தம் ரூ.2,200 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. எனினும் 2020ம் ஆண்டு இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதல் காரணமாக புறக்கணிக்கப்பட்டது. அந்தாண்டு மட்டும் ட்ரீம் 11 நிறுவனம் ரூ.222 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் மீண்டும் வெளியேறியுள்ளது.

டாடா நிறுவனம் வாங்கிய தொகை
விவோ நிறுவனம் பாதியில் சென்றாலும், அதன் ஸ்பான்சர்ஷிப் தொகையை பிசிசிஐ உயர்த்தவில்லை. இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் டாடா நிறுவனத்திற்கும் ரூ.440 கோடிக்கே 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை கொடுத்துள்ளது. இந்திய நிறுவனமே ஸ்பான்சர்ஷிப்பை வாங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications