யாரு சாமி நீங்களாம்..? ஐபிஎல் முதல் 3 நாளிலேயே பட்டையை கிளப்பிய இளைஞர்கள்.. ரசிகர்கள் உற்சாகம்
மும்பை: ஐபிஎல் 15வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. 4 லீக் போட்டிகள் முடிவடைவதற்குள் இளம் வீரர்கள் பலர் அட்டகாசமாக விளையாடி வருகின்றனர்.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்களும், வல்லுனர்களும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 4 போட்டியில் கலக்கிய இளம் படைகள் பட்டியல் குறித்தும், அவர்கள் எதிர்காலமும் குறித்து காணலாம்.

ஷெல்டன் ஜாக்சன்
கேகேஆர் அணியில் விளையாடும் ஷெல்டன் ஜாக்சனை வெளிநாட்டு வீரர் என்ற பட்டியலில் சில பத்திரிகையாளர்களே கூறியதால் அதிர்ச்சி அடைந்த அவர், ஐபிஎல் முதல் போட்டியிலேயே அசத்தினார். தோனி போல் விக்கெட் கீப்பிங் செய்ததாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டினார். இதே போன்று யுவராஜ் சிங்கும் ஷெல்டன் ஜாக்சனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக வாழ்த்தினார்.

ஆயுஷ் பதோனி
டெல்லியை சேர்ந்த 22 வயதான பதோனியை கண்டு எடுத்து லக்னோ அணியில் கம்பீர் சேர்த்தார். ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசிய பதோனி,4 பவுண்டரி, 3 சிக்சர்களை விரட்டினார். அதுவும் அணி இக்கட்டான நிலையில் தவித்த போது இந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆயுஷ் பதோனி ஒரு குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்றும், அவரால் 360 டிகிரி கோணத்திலும் விளையாட முடியும் என்று கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டினார்.

லலித் யாதவ்
டெல்லியை சேர்ந்த 25 வயதான வீரர் லலித் யாதவ் மும்பை அணிக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோல்வி உறுதி என்ற நிலையில் ஆட்டம் சென்ற போது இக்கட்டான நிலையில் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இந்த சீசனில் லலித் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

அபினவ் மனோகர்
லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் அணியில் களமிறங்கிய அபினவ் மனோகர் ஏழு பந்துகளில் ஆட்டத்தை மாற்றினார். மறுமுனையில் ராகுல் தேவதியா இவரை நம்பி ஸ்ட்ரைக் கொடுத்தது ஏன் என்று இவரது ஆட்டத்தை கண்டதும் ரசிகர்கள் புரிந்து கொண்டனர். பரபரப்பான கட்டத்தில் கூலாக விளையாடி குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications