ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியும் சென்னை அணியின் இளம் பந்துவீச்சாளர் பதிரானா 4 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு இன்றைய நாளில் அதிர்ஷ்டமில்லை என்று ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் பலனாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் விளாசியுள்ளது. முதல்முறையாக ஜெய்ப்பூர் மைதானத்தில் 200 ரன்களை எட்டி ராஜஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

10 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டிய ராஜஸ்தான் அணி, அடுத்த 6 ஓவர்களில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. இதற்கு சென்னை அணியின் இளம் வீரர்களான தீக்சனா மற்றும் பதிரானா சிறப்பாக பந்துவீசியதே காரணமாக அமைந்தது. 4 ஓவர்களை வீசிய தீக்சனா வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல் 12வது ஓவர் முதல் அட்டாக்கில் கொண்டு வரப்பட்ட குட்டி மலிங்காவான பதிரானாவும் 2 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
பின்னர் 18 மற்றும் 20 ஆகிய ஓவர்களை பதிரானா வீசினார். 18வது ஓவரில் சுமார் 150 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து, படிக்கல் பேட்டில் அடித்து எட்ஜாகி பவுண்டரிக்கு சென்றது. இரு பவுண்டரிகளும் அப்படியே சென்றதால், அந்த ஓவரில் 13 ரன்கள் அடிக்கப்பட்டது. பதிரானா சிறந்த யார்க்கர்கள் வீசியும், எட்ஜானதால் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து 20வது ஓவரில் துருவ் ஜுரெல் சிறப்பாக ஆடி 11 ரன்களை பதிரானா பந்துவீச்சில் அடித்தார்.
இருப்பினும் கடைசி ஓவரின் 5வது பந்தில் படிக்கல் பேடில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது. இந்த முறை தேர்ட் மேன் திசையில் ஃபீல்டர் நிறுத்தியும் பந்தை யாராலும் தடுக்க முடியவில்லை. சிறந்த யார்க்கர், சிறந்த ஸ்லோ பால், சிறந்த பவுன்சர், சிறந்த ஒய்டு யார்க்கர் பந்துகளை வீசியும் பதிரானா 4 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் பதிரானாவுக்கு இன்றைய நாளில் அதிர்ஷ்டமில்லாமல் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.