ஒருவழியாக தப்பித்த ஐதராபாத்.. மானம் காத்த அபிஷேக் சர்மா, கிளாஸன்.. டெல்லி அணிக்கு 198 ரன்கள் இலக்கு!
டெல்லி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 198 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் சில நாட்களுக்கு முன்பாக விளையாடிய போட்டியில், டெல்லி அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் இன்றையப் போட்டியில் ஐதராபாத் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி சார்பாக அபிஷேக் சர்மா - மயங்க் அகர்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவர் முதலே அதிரடியாக தொடங்கிய நிலையில், மயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் த்ரிப்பாட்டி 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் விக்கெட்டுகள் சரிந்தாலும் டெல்லி பந்துவீச்சில் அதிரடியாக எதிர்கொண்டார் அபிஷேக் சர்மா. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகளை விளாசிய அபிஷேக் சர்மா, 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் காரணமாக 9 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 83 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மிட்செல் மார்ஷ் வீசிய 10வது ஓவரில் மார்க்ரம் 8 ரன்களிலும், இளம் வீரர் ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அந்த ஓவரில் ஒரு ரன் கூட அடிக்கப்படவில்லை.
ஆனால் முகேஷ் குமார் வீசிய 11வது ஓவரில், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா - கிளாஸன் இணை சேர்ந்து 24 ரன்களை விளாசியது.பின்னர் சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்களில் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணியின் ரன் ரேட் குறைந்தது. இதனால் 15 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து கிளாஸன் அதிரடியை தொடங்கினார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரை விளாசி அசத்தினார்.
இதனிடையே அப்துல் சமத் 28 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் பொறுப்பு கிளாஸன் - அகில் ஹொசைன் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக ஆடிய இந்த கூட்டணி 19 ஓவர்கள் முடிவில் 185 ரன்களை குவித்தது. இதையடுத்து கடைசி ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஐதராபாத் அணி 197 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கிளாஸன் 27 பந்துகளில் 53 ரன்களும், அகில் 10 பந்துகளில் 16 ரன்கள் விளாசினர். டெல்லி அணி சார்பாக மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications