டெல்லி கோட்டையில் சாதித்த ஐதராபாத்.. சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு பதிலடி.. மார்ஷ் போராட்டம் வீண்!
டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் சொந்த மண்ணில் டெல்லி அணியிடம் அடைந்த தோல்விக்கு, ஐதராபாத் அணி பதிலடி கொடுத்து மிரட்டியுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் கிளாஸனின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து டெல்லி அணி சார்பால டேவிட் வார்னர் - சால்ட் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே டேவிட் வார்னர் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து சால்ட் - மிட்செல் மார்ஷ் கூட்டணி இணைந்தது. இந்த கூட்டணி முதல் 3 ஓவர்களுக்கு நிதானம் காட்டிய நிலையில், 4வது ஓவருக்கு பின் அதிரடியை தொடங்கியது. இதன் காரணமாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 57 ரன்களை குவித்தது.
இதன்பின்னர் உம்ரான் மாலிக் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே சால்ட் - மார்ஷ் இணைந்து 22 ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. டெல்லி பிட்ச்சில் வேகப்பந்துவீச்சு எடுபடாது என்பதை உணர்ந்த மார்க்ரம், உடனடியாக ஸ்பின்னரை அட்டாக்கில் கொண்டு வந்தார். இருப்பினும் மார்ஷ் - சால்ட் இருவரும் கவனமாக விளையாடினர். இதனால் இருவருமே அடுத்தடுத்த ஓவர்களில் அரைசதம் விளாசினார்.
2வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், மயங்க் மார்க்கண்டே வீசிய 12வது ஓவரில் சால்ட் 35 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அங்கே தொடங்கியது டெல்லி அணியின் சரிவு. இதையடுத்து அபிஷேக் சர்மா ஓவரில் மணிஷ் பாண்டே 1 ரன்னிலும், அகில் ஹொசைன் பந்தில் மார்ஷ் 63 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 15 ஓவர்களில் டெல்லி அணி 138 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடர்ந்து வந்த அறிமுக வீரர் ப்ரியம் கார்க் 12 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த சர்ஃபராஸ் கான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பு அக்சர் படேல் கைகளுக்கு வந்தது. இறுதியாக டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் 19வது ஓவரை நடராஜன் வீசினார். அந்த ஓவரில் முதல் 5 பந்துகளை சிறந்த யார்க்கராக வீசி நடராஜன் அசத்தினார். கடைசி பந்தில் மட்டும் ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை வந்தது. கடைசி ஓவரை வீச புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டார்.
அதில் முதல் 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஐதராபாத் அணியின் வெற்றி உறுதியானது. இறுதியாக ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. ஐதராபாத் அணி சார்பாக மயங்க் மார்க்கண்டே 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications