IPL 2024: 1000 சிக்ஸ்.. மாபெரும் சரித்திர சாதனை.. கிரிக்கெட் உலகை வாயை பிளக்க வைத்த ஐபிஎல் தொடர்
ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சிக்ஸர்கள் எண்ணிக்கையில் மாபெரும் மைல்கல் சாதனை படைக்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது சிக்ஸ் அடிக்கப்பட்டது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஐபிஎல் தொடரில் ஆயிரம் சிக்ஸர்கள் என்ற மைல்கல் கடக்கப்பட்டு இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே தொடரில் ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அப்போது 16,269 பந்துகளில் ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தது.
அடுத்து 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 15390 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டு இருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளையும் முந்தி 2024 ஐபிஎல் தொடரில் 13079 பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 2300 க்கும் குறைவான பந்துகளில் ஆயிரம் சிக்ஸ் அடிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு அதிக போட்டிகளில் சர்வசாதாரணமாக 200 ரன்கள் எடுக்கப்பட்டன. பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருந்தன. இதுவே இத்தனை விரைவாக ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்பட முக்கிய காரணம்.
கடந்த 2022 ஐபிஎல் தொடரில் 1062 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அடுத்து 2023 ஆம் ஆண்டு 1124 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு இன்னும் 13 லீக் போட்டிகள் மீதமுள்ளன. அடுத்து பிளே ஆப் சுற்றில் மூன்று போட்டிகளும், அதன் பின் இறுதிப் போட்டியும் உள்ளது. ஆக இத்தனை போட்டிகளில் குறைந்தது 150 முதல் 200 சிக்சர்கள் வரை அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்படும்.


Click it and Unblock the Notifications