சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஜடேஜா தான் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இந்த சீசனில் ஜடேஜா எப்படி விளையாடுவார். களத்தில் தன்னுடைய கோபத்தை காட்டுவாரா என பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படவில்லை என்றால் களத்தில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்டுவார்கள். இதன் மூலம் நான் தான் சரியான நபர், நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்பதை உணர்த்த பார்ப்பார்கள்.

அந்த வகையில் இந்த தொடரில் ஜடேஜா சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அதே சமயம் சில வீரர்கள் தங்களுக்கு பொறுப்பு கிடைக்கவில்லை என்பதால் வேண்டுமென்றே சரியாக விளையாடாமல் சொதப்பி விடுவார்கள். இப்படியும் சில கதைகள் நடைபெற்றிருக்கிறது.
உதாரணத்திற்கு தோனி இந்திய அணியின் கேப்டனாக வந்தபோது சேவாக் மற்றும் கம்பீர ஆகியோர் தொடர்ந்து சில போட்டிகளில் வேண்டுமென்றே ஆட்டமிழந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் இது குறித்து பயப்படாத தோனி இருவரையும் அதிரடியாக அணியை விட்டு நீக்கினார். அதன் பிறகு தான் இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் வந்திருந்தார்கள். இந்த நிலையில் இவர்களைப் போல் ஜடேஜாவும் களத்தில் சொதப்பி சிஎஸ்கே முதுகில் குத்தி விழுவாரோ என்ற பயமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
ஆனால் அப்படி பயப்படுவதற்கு தேவையில்லை. ஏனென்றால் இம்முறை இந்த முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தோனி இந்த முடிவை ஜடேஜாவிடம் கூறி அவருடைய அனுமதியை பெற்று தான் ருதுராஜ் கெய்க்வாடை கேப்டனாக நியமிக்கும் படி பரிந்துரை செய்திருப்பார். மேலும் ஜடேஜாவும் டி20 உலக கோப்பையில் தன்னுடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் நன்றாக விளையாடுகிறார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல் இருந்து வருகிறது. இதனால் இந்த சீசனில் தன்னுடைய திறமையை நிரூபித்து சிஎஸ்கேவுக்கும் மறைமுக பதில் சொல்லுவார், டி20 உலக கோப்பையிலும் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.