பெங்களூர் : ரஞ்சி டிராபி போட்டியின் போது காயமடைந்த இளம் வீரர் சிவம் துபே, எப்போது சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார் சிவம் துபே. 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 418 ரன்களை குவித்த சிவம் துபே, மிடில் ஆர்டரில் களமிறங்கி ஸ்பின்னர்களை வெளுப்பதில் அசத்தல் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். பந்தின் வேகம் கொஞ்சம் குறைவாக வந்தாலும் நிச்சயம் சிக்சருக்கு பறக்கும் என்பது நிச்சயம். அதேபோல் மிஸ் ஹிட் என்ற பேச்சிற்கே சிவம் துபேவின் ஆட்டத்தில் இடமில்லை.

இதனால் இந்திய அணியிலும் சிவம் துபே இடம் பிடித்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிவம் துபே ஆடிய அதிரடி ஆட்டம் மற்றும் பவுலிங் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரரை இந்திய அணி கண்டறிந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருக்கிறார் சிவம் துபே.
இருப்பினும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமிற்கு சிவம் துபே இதுவரை வந்து சேரவில்லை. வெளிநாட்டு வீரர்களான டேரில் மிட்சல், சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இன்று சிஎஸ்கே அணியுடன் இணையவுள்ளனர். அதேபோல் இளம் வீரர் சமீர் ரிஸ்வி இன்று சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். இதனால் சிவம் துபே சிஎஸ்கே அணியுடன் இணையாததற்கான காரணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஞ்சி டிராபி தொடரில் காலிறுதி போட்டிக்கு முன்பாக மும்பை அணிக்காக விளையாடிய சிவம் துபே இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதன்பின் உடனடியாக பெங்களூரில் உள்ள என்சிஏ-வுக்கு சென்று சிகிச்சையை தொடங்கினார் சிவம் துபே. இதனிடையே சென்னை வந்த அவர், பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார்.
இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் சிவம் துபே பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை சிவம் துபே முழு ஃபிட்னஸை எட்டவில்லை. இதனால் மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சிவம் துபே முழு ஃபிட்னஸையும் எட்டுவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களாகும் என்பதால், சிஎஸ்கே அணிக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது.