பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு அணி என்றால் அது ஆர்சிபி தான். எப்படி பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நீ புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான். போய் புடுங்கு போ என்று அனுப்புவாரோ, அதேபோல் ஆர் சி பி அணியில் அத்தனை ஸ்டார் வீரர்கள் இருந்தும் இதுவரை ஒரு முறை கூட அவர்கள் கோப்பையை வென்றதில்லை.
நடப்பு சீசனில் கூட விராட் கோலி, டுபிளசிஸ், மேக்ஸ்வெல், கேமரான் கிரீன், தினேஷ் கார்த்திக், ரஜத் பட்டிதார், முகமது சிராஜ் போன்ற பல ஸ்டார் வீரர்கள் இருந்தும் ஆர் சி பி அணி ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி பந்து வீச்சில் 287 ரன்கள் விட்டுக் கொடுத்து தோல்வியை தழுவியது. இது பல ரசிகர்களை மட்டுமல்லாமல் பிற விளையாட்டு நட்சத்திரங்களையும் கோபம் அடைய செய்திருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டென்னிஸ் ஜாம்பவான், மகேஷ் பூபதி எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஐபிஎல் தொடர் நன்றாக இருக்க வேண்டும். கிரிக்கெட் நன்றாக இருக்க வேண்டும், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிசிசிஐ நினைத்தால் தயவு செய்து ஆர்சிபி அணியை வேறு ஒரு புதிய உரிமையாளருக்கு விற்று விட நடவடிக்கை எடுங்கள்.
ஏனென்றால் தற்போது இருக்கும் அணி நிர்வாகம் ஆர்சிபிஐ பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. மற்ற அணிகள் எவ்வளவோ மாறுதலை செய்திருக்கிறது. ஆனால் ஆர்சிபி மிகவும் மோசமான முறையில் அணியை கட்டமைத்து இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். மகேஷ் பூபதியின் இந்தப் பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ள கருத்தில், ஆர்சிபி அணி எவ்வளவு ஸ்டார் வீரர்களை வேண்டுமானாலும் தங்கள் அணியில் வைத்துக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய வீரர்கள் வேண்டுமானாலும் அந்த அணியில் இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் என்பது அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட வேண்டிய போட்டியாகும். எவ்வளவு ஸ்டார் வீரர்கள் இருந்தாலும் உங்களால் வெற்றி பெற முடியாது என்பதற்கு ஆர்சிபி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது என்று மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.